அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் 9 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நேற்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதால் 75 ஆயிரம் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2015 நவம்பர் மாதம் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அகவிலைப்படி உயர்வு வழங்க மறுத்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து 2022-ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதிலும், ஓய்வூதியர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அதன்பிறகும் தமிழக அரசு உத்தரவை அமல்படுத்தவில்லை.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வூதியர் சங்கங்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2014-க்குப் பிறகு ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 9 சதவீதமும், அதற்கு முன் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 27 சதவீதமும் அகவிலைப்படி வழங்குமாறு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு நேற்று அகவிலைப்படி உயர்வுடன் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டது. இதனால், ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் கூறும்போது, “அகவிலைப்படி உயர்வு வழங்கியுள்ளதால் 75 ஆயிரம் ஓய்வூதியர்கள் பயனடைவர். இடைப்பட்ட 9 ஆண்டுகளில் 15,000 ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு பெறாமலேயே உயிரிழந்துவிட்டனர். இந்த அகவிலைப்படி உயர்வால் ஒவ்வொரு ஓய்வூதியரும் ரூ.1,400 முதல் ரூ.2,900 வரை கூடுதலாகப் பெறுவார்கள். நீதிமன்ற தீர்ப்பின்படி நிலுவைத் தொகையையும் விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.