நாக்பூர்,
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் போட்டி வரும் 6ம் தேதி நாக்பூரில் நடைபெற உள்ளதை அடுத்து இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து இளம் விக்கெட் கீப்பரான ஜேமி ஸ்மித் இடம் பெற மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ஜேமி ஸ்மித் மூன்றாவது டி20 போட்டியின் போது காயத்தை சந்தித்ததன் காரணமாக கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இருந்தும் விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேலுக்கு லெவனில் வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில், ஜேமி ஸ்மித் தனது உடற்தகுதியை எட்டாத காரணத்தால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.