ஈரோடு: நான்கு ஆண்டுகளில், 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் இன்று நடக்கும் நிலையில், கடந்த இடைத்தேர்தலைப் போல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற இந்த இடைத்தேர்தலில், 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
களை கட்டிய தேர்தல்: அந்த இடைத்தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கூட்டணிக் கட்சியினர் காங்கிரஸ் வேட்பாளருக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக ஈபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர் அண்ணாமலை, வாசன், நாதக வேட்பாளருக்கு ஆதரவாக சீமான், தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரேமலதா உள்ளிட்டோரும் ஈரோடு தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த தேர்தலின்போது வாக்காளர்கள் பட்டியில் அடைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் தொடங்கி பணம், பரிசுப்பொருள் விநியோகம் என நாள்தோறும் தேர்தல்களம் களைகட்டி காணப்பட்டது.
கடந்த தேர்தல் வாக்கு பதிவு: ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் (9 மணிக்கு) 10.10 சதவீத வாக்குகள் பதிவாகின. 11 மணிக்கு 27.89 சதவீதமும், 1 மணிக்கு 44.56 சதவீதமும், 3 மணிக்கு 59.22 சதவீதமும், மாலை 5 மணிக்கு 70.58 சதவீதமும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு நிறைவில், 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின.
தற்போதைய நிலவரம்: ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 237 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வீரப்பன்சத்திரம், பிராமண பெரிய அக்ரஹாரம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 ஆவணங்களைக் கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திற்கு பின், 9 மணியளவில் 10.95சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இருமுனைப் போட்டி: ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போதைய தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் இவர்களது வாக்குகள் யார் பக்கம் சாயும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திமுக வேட்பாளரை ஆதரித்து, ஈரோடு மாவட்ட அமைச்சரான முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், வீடு, வீடாகச் சென்று அமைதியான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்த கடும் விமர்சனங்களை முன் வைத்து இந்த தேர்தல் களத்தை அணுகினார். இதனால், பெரியார் மீதான விமர்சனத்தை ஈரோடு வாக்காளர்கள் எப்படி அணுகப் போகின்றனர், ஆர்வத்தோடு வாக்களிக்க வருவார்களா, வாக்குப்பதிவு சதவீதம் உயருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாசிக்க>> திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு