ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், நேற்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
சம்பத்நகர் வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது, வாக்குச் சாவடிகளில் தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. வரும் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. சில சம்பவங்கள் தவிர, தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது.