குற்றங்கள் செய்வதற்கு கட்சி அடையாளம் லைசென்ஸா? – திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்

சென்னை: “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் மரணங்களில் இந்த அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?. தமிழகத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா ?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச் சாரயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மரக்காணம் மரணங்களில் இருந்தோ, நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்களில் இருந்தோ இந்த ஸ்டாலின் மாடல் அரசு ஒரு பாடம் கூட கற்கவில்லையா?

“போலீஸுக்கு பணம் கொடுத்து தான் விற்கிறோம்” என்று கள்ளச்சாராயம் விற்பவன் தைரியமாக சொல்லும் அளவுக்கு கள்ளச்சாராய விற்பனையை நிறுவனமயப் படுத்தியுள்ளதற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு வெட்கப்பட வேண்டும். போதாக்குறைக்கு, “திமுக கட்சிக்காரன்” எனும் அடையாளம் வேறு. திமுக என்றால், இரண்டு கொம்பு முளைத்தவர்களா?

அவர்கள் எந்த தவறு செய்தாலும் காவல்துறை கண்டுகொள்ளாதா? தமிழகத்தில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது, உங்கள் கட்சி அடையாளத்தை லைசன்சாக பயன்படுத்தி, சகல குற்றங்களையும் திமுகவினர் செய்வதற்கு தானா ?

உடனடியாக இந்த கள்ளச் சாராய விற்பனையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்வதோடு, எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி அனைவர் மீதும் சட்ட நடவடிக்கையை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகம் முழுக்க கள்ளச் சாராயத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.