மதுரை: மேலூர் டங்ஸ்டன் திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய பரிந்துரை கடிதத்துக்கு மூன்றரை மாதத்துக்கு பிறகு பதில் கடிதத்தை மத்திய சுரங்கத்துறை இயக்குநர் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், மேலூர் பகுதி கனிமக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடந்த 2024 நவம்பர் 18-ம் தேதி டங்ஸ்டன் திட்ட முழு விபரங்களை திரட்டி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆட்சியர் சங்கீதாவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில், ‘டங்ஸ்டன் என்னும் பேரழிவுத் திட்டத்தை செயல்படுத்தினால் மேலூர் பகுதி மக்களுக்கு ஆபத்து ஏற்படும். இத்திட்டத்தால் நாயக்கர்பட்டி உள்ளிட்ட 10 கிராமத்தினர் விவசாயத்தைவிட்டு அகதிகளாக வெளியேறும் சூழல் உருவாகும். டங்ஸ்டன் திட்டத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என, வலியுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், இந்த மனுவிற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர், ஜன.10-ம் தேதியிட்ட பதில் கடித அறிக்கை ஒன்றை முகிலனுக்கு பதிவு தபாலில் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: மேலூர் வட்டம், தெற்குதெரு, முத்துவேல்பட்டி, குலானிபட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வெள்ளாளபட்டி, சிலப்பிரியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி கிராம பகுதிகளில் இந்துதாஸ்தான் ஜின்ங் லிமிடெட் நிறுவனம் 2024 நவம்பர் 7-ல் 2015.51 (சுமார் 5000 ஏக்கர்) பரப்பளவில் சுரங்கம் மற்றும் கனிமம் ( மேம்பாடு , ஒழுங்குமுறை) சட்டம் 1957-ன் படி டங்ஸ்டன் கனிம சுரங்கம் நாயக்கர்பட்டி தொகுதியினை 4-வது ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்த ஏலம் முதல் அட்டவணை பகுதி டி-யில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய கனிமங்களுக்கு கனிம சலுகை வழங்குவதற்கான சலுகைகளை மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் காலத்தில் மேற்கண்ட 10 கிராம மக்களும் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தைவிட்டு அகதிகளாக வெளியேற வேண்டி வரும் என, தெரிவித்து இணையவழி வாயிலாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஜெய் சண்முகம், ரா.சா.முகிலன் மனு சமர்பித்துள்ளனர்.
மேலூர் வட்டம், அரிட்டாபட்டி மற்றும் அதன் அருகிலுள்ள கிராம பகுதிகளில் வாழும் அரியவகை உயிரினங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் முதல்பல்லுயிர் ஸ்தலமாக 2022ம் ஆண்டு தமிழக அரசு சிறப்பு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் முதல் பல்லுயிர் ஸ்தலத்தினை பாதுகாக்கும் பொருட்டும் மேற்கண்ட கிராமங்களை உள்ளடக்கிய 22 சதுர கி.மீ., பரப்பில் டங்ஸ்டன் கனிம கூட்டு உரிமம் வழங்குவதற்கு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையினை கைவிடுமாறு தமிழக அரசின் வாயிலாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.