தலைநகர் டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை சுமூகமாக நடத்த 220 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்களும், 19,000 ஊர்காவல் படையினரும், டெல்லி போலீஸார் 35,626 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட தேசியத் தலைவர்கள் பலர் இங்கு கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதை வாக்காளர்கள் இன்று தீர்மானிக்கின்றனர்.
டெல்லியில் முதல்வர் அதிஷி கல்காஜி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா, பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மீண்டும் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆம் ஆத்மி மூத்த தலைவர் மனீஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் போட்டியிடுகிறார்.