புதுடெல்லி: டெல்லியில் மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.7% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில், மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்பட பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 46.55% வாக்குகள் பதிவான நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 57.70% வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
“தேசிய தலைநகர் டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளிலும் இன்று அமைதியான முறையிலும், கொண்டாட்டமான சூழ்நிலையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை தொடரும். மாலை 5 மணி வரை வாக்குச் சாவடிகளில் 57.7% வாக்குகள் பதிவாகி உள்ளன. முறையான வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகு, அதாவது மாலை 6 மணிக்குப் பிறகு வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்” என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சில வாக்குகச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து, EVM மற்றும் VVPAT ஆகியவை சீல் வைக்கப்பட்டன.
சட்டமன்றத் தேர்தலின் போது சுமூகமான மற்றும் அமைதியான வாக்குப்பதிவை டெல்லி காவல்துறை உறுதி செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுமுகமான மற்றும் அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கு டெல்லி காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.55 சதவீத வாக்குகள் எந்த பெரிய சம்பவங்களும் இல்லாமல் பதிவாகின என்று அவர் தெரிவித்தார்.
அனைத்து காவல் துறை அதிகாரிகளும் களத்தில் தீவிரமாக நிறுத்தப்பட்டதாகவும், மாதிரி நடத்தை விதி மீறல்கள் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சிறப்பு காவல் ஆணையர் (SPN-சட்டமன்றத் தேர்தல்) தேவேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். வாக்களிப்பதை எளிதாக்க, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு காவல் குழுக்கள் உதவியதாக டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா கூறினார்.