டெல்லி பேரவைத் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு – ஹாட்ரிக் அடிக்குமா ஆம் ஆத்மி?

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று (பிப்.5) காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 8 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடும் குளிர் காரணமாக வாக்குப்பதிவு தொடங்கியபோது மந்தநிலை நிலவினாலும் பின்னர் படிப்படியாக வாக்குப்பதிவு விறுவிறுப்பானது.

டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து கட்சிக்கு ஹேட்ரிக் வெற்றி பெற்றுத்தரும் முனைப்பில் களம் கண்டுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி என டெல்லியில் ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனதை மாற்றி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி களம் கண்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி ஹேட்ரிக் வெற்றி பெறுமா இல்லை பாஜகவின் 25 ஆண்டு கால கனவு நிறைவேறுமா என்பது வரும் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

கேஜ்ரிவால் வேண்டுகோள்.. இதற்கிடையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், “உங்கள் வாக்கு வெறும் பொத்தானை அழுத்துவதோடு முடிந்துவிடாது. அது தான் உங்கள் குழந்தையின் எதிர்காலம். அதுவே உங்கள் குழந்தைகளுக்கு தரமான பள்ளிக்கூடங்கள், தரமான மருத்துவமனைகள், அனைத்து குடும்பங்களுக்கும் மரியாதையான வாழ்க்கையை உறுதி செய்யக் கூடியது.

இன்று நாம் பொய்யால் ஆன அரசியலை, வெறுப்பால் உருவாக்கப்பட்ட அரசியலை வெற்றி காண வேண்டும். உண்மை, வளர்ச்சி, நேர்மை வெற்றி பெறச் செய்ய வேண்டும். வாக்களியுங்கள். உங்களுக்காக வாக்களியுங்கள்; உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்கள், அண்டை வீட்டருக்கு வாக்களிக்க ஊக்கமளியுங்கள். அடாவடித்தனங்கள் வீழும். டெல்லி வெற்றி பெறும்.” என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் வாக்களிப்பு: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ராஜேந்திர பிரசாத் கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் காலையிலேயே வந்து வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். டெல்லி முதல்வர் அதிஷி தனது வாக்கினை செலுத்தினார்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வதேராவின் கணவர் ராபர்ட் வதேரா வாக்களிக்கச் செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாற்றம் வேண்டும் என நினைத்தால் அனைவரும் வெளியே வந்து வாக்களியுங்கள். சாதாரண நபர்கள் என்று காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் அப்படியானவர்கள். அவர்கள் டெல்லியை மோசமாக நிர்வகித்துள்ளனர்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.