டெல்லி பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 46.55% வாக்குப் பதிவு

புதுடெல்லி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு 46.55%-ஐ எட்டியுள்ளது. அதிகபட்சமாக முஸ்தபாபாத்தில் 56.12% வாக்குகள் பதிவாகியுள்ளன.

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 46.55%-ஐ எட்டியுள்ளதாக டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக முஸ்தபாபாத்தில் 56.12% வாக்குகளும், கரோல் பாக் சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த அளவாக 39.05% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

டெல்லியில் தலைவர்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி உள்ளனர். தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “ஒவ்வொரு நபரும் நாட்டுக்காக விவேகமாகவும் சுதந்திரமாகவும் வாக்களிக்கும்போது மட்டுமே ஜனநாயகம் செழித்து, வளர்ச்சியடைகிறது. உலகின் பழமையான, வலிமையான மற்றும் மிகவும் துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது” என்று கூறினார்.

பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் இன்று குஷாக் பாதையில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், “வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஜனநாயக உரிமை. இதை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதோடு, இது குடிமக்களின் தார்மீகப் பொறுப்பையும் உள்ளடக்கியது. எனவே, குடிமக்கள் தாங்களாக முன்வந்து தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

ஆம் ஆத்மி Vs பாஜக குற்றச்சாட்டுகள்: சீலம்பூர் மற்றும் கஸ்தூர்பா நகர் உட்பட டெல்லியின் சில பகுதிகளில், வெளியில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து வாக்களிக்க வைப்பதாக ஆம் ஆத்மி கட்சி மீது பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீலம்பூர் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் அனில் கவுர், “உத்தரப் பிரதேசத்தின் லோனியிலிருந்து 300 -4 00 போலி வாக்காளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நாங்கள் 25 பேரைப் பிடித்தோம். இங்கே போலி வாக்குப்பதிவு நடக்கிறது. நாங்கள் அதை நிறுத்திவிட்டோம். கேஜ்ரிவால் போலி வாக்குப்பதிவு செய்கிறார்” என குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளது. “சிராக் தொகுதி மக்கள் வாக்களிக்க முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர். ஜங்புராவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பணம் விநியோகிக்கப்படுகிறது” என கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.

டெல்லியில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைத்தோம். டெல்லியிலும் முழு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தை அமைப்போம். டெல்லியில் பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் அமைக்கப்படும். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படும்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா கூறுகையில், “டெல்லி மக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டிய மிக முக்கியமான நாள் இது. தாங்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் ஒவ்வொரு நபருக்கும், இதுதான் முக்கியமான நேரம். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரு கட்சிக்கு வாக்களிக்கலாம்.

நான் பலரைச் சந்தித்து பணவீக்கம், மோசமான உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பான அவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசினேன். அளித்த வாக்குறுதிகளை அரவிந்த் கேஜ்ரிவால் நிறைவேற்றவில்லை. இந்த முறை முடிவுகள் அவருக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை. டெல்லியை சிறந்த மற்றும் பாதுகாப்பான இடமாக மாற்ற சந்தீப் தீட்சித் பெரிதும் உதவுவார்” என்று தெரிவித்தார்.

டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து கட்சிக்கு ஹாட்ரிக் வெற்றி பெற்றுத் தரும் முனைப்பில் களம் கண்டுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ், ஆம் ஆத்மி என டெல்லியில் ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனதை மாற்றி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி களம் கண்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி ஹாட்ரிக் வெற்றி பெறுமா அலல்து பாஜகவின் 25 ஆண்டு கால கனவு நிறைவேறுமா என்பது வரும் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.