நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கியது அமெரிக்க விமானம்

புதுடெல்லி: சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் இன்று (ஜன.5) பிற்பகல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமானம் பிற்பகல் 1.55 மணிக்கு தரையிறங்கியது.

இந்த 104 இந்தியர்களில் 30 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத் மாநிலத்தையும், தலா மூன்று பேர் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தையும், இரண்டு பேர் சண்டிகரையும் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

காங்கிரஸ் வேதனை: “அமெரிக்காவில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டபோது, அவர்களின் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது” என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, அமெரிக்க ராணுவ விமானம் C-17, அந்நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்த 205 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர். இந்தச் சூழலில், முதல் கட்டமாக 104 இந்தியர்களுடன் அமெரிக்க விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது.

இது இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறியது: ‘அமெரிக்காவின் டெக்சாஸ், கலிபோர்னியா, சான்டியாகோ உள்ளிட்ட 12 மாகாணங்களில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த மாகாணங்களில் நாள்தோறும் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுவரை 25,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இதுவரை 5,000 பேர் ராணுவ சிறப்பு விமானங்களில் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். முதல்கட்டமாக இந்தியாவைச் சேர்ந்த 205 பேரை அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளோம். எந்த நாடும் ஏற்காத சட்டவிரோத குடியேறிகளை எல் சல்வடார் நாட்டில் உள்ள சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவுக்கும் எல் சல்வடார் நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.