மதுராந்தகம் அடுத்த மேலவளம்பேட்டை பகுதியிலிருந்து, தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூர் வரையிலான 46.5 கி.மீ. நீளம்கொண்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருமார்க்கத்திலும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை நிகழ்ந்த 1,023 சாலை விபத்துகளில் 223 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், வாகன ஓட்டிகளின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியாக விளங்கும் தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூர் பகுதியில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள மேலவளம் பேட்டை பகுதி வரை, 46.5 கி.மீ. தொலைவு கொண்ட சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. 2004 முதல் 4 வழித்தடம் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக கட்டமைக்கப்பட்டது.
இதையடுத்து, 2005-ம் ஆண்டு முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் பராமரிப்பு செலவு மற்றும் விபத்துகளின் விவரங்கள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் ஆர்டிஐ மூலம் விவரங்கள் பெற்றுள்ளார். இதில், சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள், சாலை பராமரிப்பு செலவுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்கண்ட 46.5 கி.மீ. தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமானத்துக்கான மூலதன செலவு ரூ.1,036.91 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024-ம் ஆண்டு வரையில் வாகனங்களிடம் சுங்க கட்டணமாக ரூ.596.80 கோடி என 57.6 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நிலுவையாக ரூ.440.11 கோடி என 42.4 சதவீதம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவு ரூ.640 கோடி, சாலை பராமரிப்பு மற்றும் அதனுடைய தொடர்புடைய பணிகளுக்கான செலவு ரூ.1,009 கோடி, சாலை பாதுகாப்பு செலவு ரூ.83 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சாலையில் மட்டும் கடந்த 6 ஆண்டுகளில் 1,023 விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில், 223 பேர் உயிரிழந்துள்ளனர். 481 பேர் பெரியளவில் காயமடைந்துள்ளனர். மேலும், 1,102 பேர் சிறியளவில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக 2019-20-ல் மட்டும் 384 விபத்துகள் நடைபெற்றுள்ளது. அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடமாக 57 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், 4 இடங்களில் மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும், இரும்புலியூர் பகுதியிலிருந்து மகேந்திராசிட்டி வரையில் உள்ள 20.9 கி.மீ. தொலைவு கொண்ட சாலையை தற்போது 8 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் ரூ.274 கோடி செலவில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 34 ஆயிரத்து 690 கார்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட சாலையில், தற்போது 1,02,421 வாகனங்கள் செல்கின்றன. இவ்வாறு அந்த ஆர்டிஐயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மேற்கண்ட சாலையில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலை நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் புருஷோத்தமன் கூறியதாவது: இரும்புலியூர் – மேலவளம் பேட்டை இடையே உள்ள 46 கி.மீ. சாலையில் 6 ஆண்டுகளில் மட்டும் 223 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது. சாலை பாதுகாப்பு, பராமரிப்பு என பல்வேறு வடிவில் நிதி செலவிடப்பட்டுள்ளது.
ஆனாலும், விபத்தில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, மேற்கண்ட சாலையில் பயணிக்கவே அச்சம் ஏற்படும் நிலை உள்ளது. இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் என்னதான் தீர்வு காண போகின்றன என தெரியவில்லை.
சுங்க கட்டணம் வசூலிப்பதை மட்டுமே பிரதானமாக கருதாமல், விபத்துகள் நடைபெறுவதை தடுக்க நகாய் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையின் செலவு தொகையில் 57 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஏற்கும்படியாக இல்லை என்றார்.