கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருக்கும். தற்போது யானைகள் வலசை காலம் என்பதால் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் என்ற சுற்றுலா பயணி ஒருவர் ராயல் என்ஃபீல்ட் பைக்கில் நேற்று மாலை வால்பாறை மலை பகுதியில் செல்ல முயற்சித்துள்ளார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Screenshot_20250205_103710.jpg)
யானைகள் நடமாட்டம் இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அவரை எச்சரித்துள்ளனர்.
ஆனால் வனத்துறையின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு அவர் வேகமாக சென்றுள்ளார். டைகர் பள்ளத்தாக்கு காட்சி முனை அருகே ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. சக பயணிகள் சிலர் யானை செல்வதற்காக காத்திருந்தனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/IMG_20250204_WA0020.jpg)
மைக்கேல் அதையும் கேட்காமல் பைக்கில் வேகமாக யானையின் அருகிலேயே சென்றுவிட்டார். இதனால் யானை அவரை பைக்குடன் தூக்கி வீசி தாக்கியது. யானை அங்கிருந்து மீண்டும் செல்ல முயற்சித்தபோது, மைக்கேல் எழுந்து தப்பி செல்ல முயற்சித்தார்.
அப்போது யானை அவரை மீண்டும் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/IMG_20250205_WA0002.jpg)
வனத்துறை எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், யானை நின்று கொண்டிருக்கும்போதே அருகில் சென்றதால் தான் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. எனவே வால்பாறை செல்லும் மக்கள் எங்கள் அறிவிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று வனத்துறை கூறியுள்ளது.