“இதை அனுமதித்தது ஏன்?” – ‘இந்தியர்களுக்கு கைவிலங்கு’ விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பிரியங்கா கேள்வி

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து கடுமையாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி பிரியாங்கா காந்தி, “இப்படி நடக்க ஏன் அனுமதித்தீர்கள்?” என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து வயநாடு எம்.பி பிரியங்கா கூறுகையில், “பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும் நல்ல நண்பர்கள் என பல விஷயங்கள் சொல்லப்பட்டன. இவ்வாறு நடக்க பிரதமர் அனுமதித்தது ஏன்? அவர்களைத் (நாடு கடத்தப்பட்டவர்கள்) திரும்ப அழைத்து வர நமது சொந்த விமானத்தை அனுப்ப முடியாதா? மனிதர்களை இப்படித்தான் நடத்துவார்களா? அவர்களின் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு அனுப்பப்பட்டார்கள். இந்த விவகாரத்தில் பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் நண்பர்கள் என்று கூறும்போது, இந்தியர்களை அவமரியாதையாக நடத்த அனுமதிக்கலாமா?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பிய நிலையில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும்போது, “சிலர் தங்களை உலகின் மிகச் சிறந்த தலைவர் என்று கூறிக் கொள்கின்றனர். அவர்கள் இப்போது மவுனமாக இருக்கின்றனர்” என்று பிரதமர் மோடியை சாடினார்

கவனம் ஈர்த்த போராட்டம்: காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சமாஜ்வாதி கட்சி எம்.பி. தர்மேந்திர யாதவ், காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அவுஜ்லா உள்ளிட்ட சிலர், நாடு கடத்தப்பட்டவர்கள் கைகளில் விலங்கு பூட்டப்பட்டதை சுட்டிக்காட்டும் விதமாக, தங்களின் கைகளில் விலங்குகள் மாட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள், ‘கைதிகள் அல்ல, மனிதர்கள்’, ‘கைவிலங்குகளில் இந்தியா, அவமரியாதையை நாங்கள் பொறுக்க மாட்டோம்’, ‘ஒவ்வொரு இந்தியனின் பெருமையும் நீதியே… சங்கிலி அல்ல’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர். மேலும், நாடு கடத்தப்பட்டவர்களின் கவலைகளை தீர்க்க தூதகர ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த இந்தப் போராட்டத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “இந்தியாவை விஸ்வகுருவாக ஆக்கும் கனவைக் காட்டியவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? தற்போது அவர்கள் மவுனம் காப்பது ஏன்? இந்திய குடிமக்கள் மனிதாபிமானமற்ற முறையில், கைகளில் விலங்கிடப்பட்டு அடிமைகளைப் போல நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள். வெளியுறவு அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்த நாடு கடத்தல் விவகாரத்தில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களைக் காக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என்றார்.

நடந்தது என்ன? – அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். அமெரிக்க ராணுவ விமானத்தில் வந்த அவர்கள், பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இது தொடர்பான வீடியோவை அமெரிக்க எல்லை பாதுகாப்பு ரோந்து படையின் தலைவர் மைக்கேல் பாங்க் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

அதோடு மைக்கேல் பாங்க் வெளியிட்ட பதிவில், “சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பி உள்ளோம். இது மிக நீண்ட தொலைவு பயணம். சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நீங்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தால், நிச்சயமாக விரட்டியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எதிரொலித்தது.

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. “அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கிடப்பட்டது ஏன்? இந்தியர்களை தீவிரவாதிகளை போன்று நடத்தியது ஏன்?” என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.