இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தால் நாடாளுன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க உள்ளார்.

அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியர்கள் கைகளில் விலங்கிடப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் கொண்டுவரப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைகளில் விலங்கு பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றம் காலை 11 மணிக்கு கூடியதும் இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, “நீங்கள் கூறும் விஷயத்தை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அது வெளியுறவுத்துறை சம்மந்தப்பட்ட விவகாரம். அது மற்றொரு நாட்டின் கொள்கை சம்மந்தப்பட்டது. அரசு இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளது” என்றார். என்றாலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், சபாநாயகர் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

முன்னதாக, இந்த நாடுகடத்தல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கே.சி. வேணுகோபால் அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். அதில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ராஜதந்திர நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதேநிலைதான் மாநிலங்களவையிலும் நிலவியது. காங்கிரஸ், சிபிஐ, திரிணமூல் காங்கிரஸ், மற்றும் சிபிஎம் கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை மாநிலங்களவையில் எழுப்பினர்.

செய்தியாள்ர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், “இந்திய குடிமக்களை கைகளில் விலங்கிட்டு நாடு கடத்திய ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை நாட்டுக்கான அவமானம். அவ்வாறு செய்யப்பட்டதை நாங்கள் எதிர்க்கிறோம். தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை நாடுகடத்தும் முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் திடீரென ஒரு ராணுவ விமானத்தில் ஏற்றி, கைகளில் விலங்கிட்டு அனுப்பி வைத்தது இந்தியாவுக்கான அவமானம், இது இந்தியர்களின் கண்ணியத்துக்கான அவமானம்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.