மற்ற மாநிலங்களைப்போல சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை தமிழக அரசு நடத்தாதது ஏன்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழியிருக்கிறது. எனவேதான் பிஹார், கர்நாடக மாநில அரசுகள் ஏற்கெனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்து, புள்ளிவிவரங்களை கையில் வைத்துள்ளன.
மேலும், தெலங்கானா மாநில அரசு ஐம்பதே நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சில திட்டங்களை, மற்ற மாநில அரசுகள் பின்பற்றுகின்றன என்று தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசுகின்றனர். ஆனால், சமூகநீதிக்கு அடித்தளம் அமைக்கும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தி முடித்த மற்ற மாநிலங்களை பின்பற்ற தயங்குவது ஏன்?
‘பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கெல்லாம் தலைவர்’ என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுயலாபத்துக்காக மட்டுமே அவரைப் பற்றி பெருமை பேசும் தற்போதையை ஆட்சியாளர்கள், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
சாதிவாரி கணக்கெடுப்பைத்தான் மத்திய அரசு எடுக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாக ஆய்வை மாநில அரசு நடத்தலாமே? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில், மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர்.
சாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால், தற்போதையை ஆட்சியாளர்களின் பொய்வேடம் தானாகவே கலையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.