திருமணத்தில் ஏற்பட்ட தகராறால், மணமகன் வீட்டாரின் மீசை, தலை முடியை மழித்ததற்காக ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் அபராதம் விதித்து மகா பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ளூர் தலைவர்களின் தலைமையில் கூடும் கூட்டம் தான் மகா பஞ்சாயத்து என்பர். கிராமத்தில் ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த பஞ்சாயத்து முடிவு எடுக்கும். அந்த வகையில் ஒரு குடும்பத்திற்கு 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது மகா பஞ்சாயத்து. ஏன் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Untitled-20.jpg)
ராஜஸ்தான் கரிரி கிராமத்தில் வசிக்கும் ஶ்ரீமான் மகன் கமலேஷுக்கும், ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீமான் தவிர, இரு குடும்பத்தினர் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், திருமண பேச்சு வார்த்தை முடிந்தவுடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அந்த பெண்ணுக்கு வளையல் அணிவிக்கும் விழாவிற்காக (உள்ளூர் முறைப்படி நிச்சயதார்த்தம்) ரோன்சி கிராமத்திற்குச் சென்றனர். ஆனால் அந்த விழாவிற்கு சற்று முன்பு மணப்பெண் பிடிக்கவில்லை என்று மணமகன் வீட்டார் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ரோன்சி கிராமம் அவமானப்பட்டதாக கருதி சம்பவம் நடந்த மறுநாளே மணப்பெண் பிடிக்கவில்லை என்று கூறிய மணமகன் வீட்டார் ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரோன்சி கிராம உள்ளூர் தலைவர்கள் மூலம் முடிவு செய்து ஒரு பத்திரத்தாளில் எழுதினர்.
அதுமட்டுமில்லாமல் அப்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், மணமகன் கமலேஷின் சகோதரர் நரேஷின் மீசை மற்றும் தலைமுடியை வெட்டி அதை காணொளியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தங்களது கிராமத்துக்கு பெரிய அவமானம் என்று மாப்பிள்ளை வீட்டாரின் கரிரி கிராம மக்கள் வேதனைப்பட்டனர்.
ஆனால், இரு தரப்பினரும் காவல்துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை மாறாக இந்த சம்பவம் குறித்து மகா பஞ்சாயத்தில் தெரிவித்துள்ளனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2024/12/newssensetn2022-03f9bd45ff-0ed5-4ff5-9325-d6197bbe714epexelssurenram7458680.avif.jpeg)
இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக மகா பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதில் அந்த கிராமத்தை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். மகா பஞ்சாயத்தில் ஶ்ரீமான் மற்றும் கமலேஷ் ஆகியவரிடம் நடந்தது குறித்து கேட்கப்பட்டது. அதன் பிறகு 21 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
விசாரித்ததில் கமலேஷ் குடும்பத்தினர் கூறுகையில் “நிச்சியம் செய்வதற்காக ரோன்சி கிராமத்திற்கு சென்றோம். அப்போது பெண்வீட்டார் மணமகனுக்கு பெண்ணை காட்டாததால் அந்த விழா நடத்த மறுத்து விட்டதாகவும், அதன் பின்னர் பெண் வீட்டார் அனைவரையும் பிடித்து தொலைபேசியை எடுத்துச் சென்று விட்டனர் எனவும் கூறினர். அதுமட்டுமில்லாமல் மணமகனின் சகோதரர் நரேஷின் மீசையும் முடியையும் வெட்டி விட்டனர் என அவர்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். நடந்தவிவரங்களை தெரிந்துக்கொண்ட மகா பஞ்சாயத்து குழுவினர், ஏற்கெனவே கமலேஷ் குடும்பத்தினர் ரூ. 11 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ரோன்சி கிராமம் பஞ்சாயத்தில் முடிவெடுத்திருந்தது செல்லாது என அறிவித்தனர்.
இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் ரோன்சி கிராமத்தைச் சேர்ந்த பெண் வீட்டார் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. பஞ்சாயத்தினர்களின் அழுத்தத்தின் கீழ் அவர்கள் அந்த பணத்தை செலுத்தினர். இந்த 11 லட்சம் கரிரி கிராமத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் இந்த பணத்தை கோவில்கள் மத நிகழ்ச்சிகள் அல்லது பள்ளிகள் என எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று மகா பஞ்சாயத்து முடிவு செய்தது.