நிலவிலிருந்து மண்ணை எடுத்து வர 2027-ம் ஆண்டு சந்திரயான்-4 அனுப்பப்படும்: அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்காக 2027-ம் ஆண்டு சந்திரயான்-4 விண்கலம் அனுப்பப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது: சந்திரயான்-4 விண்கலம் 2027-ம் ஆண்டு அனுப்பப்படவுள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் அனுப்பப்படும். விண்கலத்தின் 5 முக்கிய பாகங்கள் 2 ராக்கெட்டுகளில் தனித்தனியாக விண்ணுக்கு அனுப்பப்பட்டு ஒன்று சேர்க்கப்படும். அதன்பின் இந்த விண்கலம் நிலவுக்கு செல்லும். நிலவில் மேற்பரப்பில் இருந்து பாறைத் துகள்கள் பூமி எடுத்துவரப்பட்டு ஆய்வு செய்யப்படும்.

அடுத்தாண்டு ககன்யான் திட்டம் மேற்கொள்ளப்படும். இதில் இந்திய வீரர்கள் விண்கலம் மூலம் புவி சுற்றுவட்டபாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பூமி கொண்டுவரப்படுவர். அதற்கு முன் ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலத்தில் ‘வயோமித்ரா’ ரோபோ அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படும். இந்த ஆளில்லா விண்கலம் இந்தாண்டில் ஏவப்படும்.

அடுத்தாண்டு சுமுத்ரயான் திட்டத்தையும் இந்தியா மேற்கொள்கிறது. இதற்காக நீர்மூழ்கி ஒன்றில் 3 விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அனுப்பப்பட்டு, கடலின் தரைப்பகுதி ஆய்வு செய்யப்படும். இத்திட்டம் குறித்து சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த ஆய்வு மூலம் கடலில் உள்ள கனிமங்கள், கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்படும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் உதவும்.

விண்வெளி ஆய்வுக்காக இஸ்ரோ மையம் கடந்த 1969-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. முதல் ஏவுதளம் அமைக்க 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. கடந்த 1993-ம் ஆண்டு தான் முதல் ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டது. 2-வது ஏவுதளம் 2004-ல் அமைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் பல விரிவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மிகப் பெரிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் 3-வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. சிறிய ரக செய்கைகோள்களை ஏவுவதற்கு தூத்துக்குடியில் புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது அடுத்த 10 ஆண்டில் 44 பில்லியன் டாலராக உயரும். விண்வெளித்துறை கடந்த 10 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் தனியார் துறையினர் இதில் நுழைந்து புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் சர்வதேச முதலீடு மற்றும் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் மிகப் பெரிய சாதனைகளை இந்தியா படைக்கும். இவ்வாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.