சென்னை: இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு நோக்கி 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ) ஆகும். இத்தடத்தில் பசுமைவழிச் சாலை பகுதியில் இருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2023-ம் ஆண்டு பிப்.16-ம் தேதி தொடங்கியது.
முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ‘காவிரி’, 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம் ‘அடையாறு’ ஆகிய இயந்திரங்கள் அடுத்தடுத்து சுரங்கப் பணிகளைத் தொடங்கின. இதில், ‘காவிரி’ கடந்த ஆண்டு செப்.20-ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்து, அடையாறு சந்திப்பை வந்தடைந்தது. இதேபோல, மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரமும் கடந்த நவம்பரில் வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், அங்கு கடினமான பாறைகள் இருந்ததால், பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, அடையாறு சந்திப்பை ‘அடையாறு’ இயந்திரம் நெருங்கியுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பசுமைவழிச்சாலை – அடையாறு சந்திப்பு இடையே இரண்டாம் சுரங்கம் தோண்டும் இயந்திரம், இந்த வாரத்தில் வெளியேற்ற முடிவு செய்துள்ளோம். அடையாறு ஆற்றின் சில பகுதிகளின் கீழ் கடினமான பாறைகளால், பணிகள் சவாலாக இருந்தன. இதனால், 2 மாதம் தாமதமானது.
இரண்டாம் கட்டத்தில் மொத்தமுள்ள 69 கி.மீ சுரங்கப்பாதையில் தற்போது வரை 18 கி.மீ. சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். 2028-ம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.