சென்னை: பொது மக்களின் பிரச்சினைகளை போலீஸார் பரிவோடு கேட்டு தீர்த்து வைக்க வேண்டும் என, முதல்வர் காவலர் பதக்கங்களை வழங்கி காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.
தமிழக காவல் துறையில் 10 ஆண்டுகள் மெச்சத் தகுந்த வகையில், தண்டனைகளின்றி பணிபுரிந்த போலீஸாருக்கு தமிழக முதல்வரால் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று முதல்வரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் 3,000 போலீஸாருக்கு பதக்கங்கள் வழங்க பொங்கல் தினத்தன்று தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.
அதில், சென்னை பெருநகர காவல் பிரிவில் பணிபுரியும் 515 போலீஸார் மற்றும் தமிழக காவல் துறையின் இதர சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 255 போலீஸார் என மொத்தம் 770 போலீஸாருக்கு 2025-ம் ஆண்டிற்கான தமிழக முதல்வரின் ‘காவலர் பதக்கம்’ வழங்கும் விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர் அருண் பதக்கங்களை வழங்கி பேசியதாவது:
மத்திய, மாநில அரசில் பணியாற்றுபவர்களை அரசு பணியாளர்கள் என்று கூறுகிறோம். இந்த அரசு பணிகளில் பல்வேறு துறைகள் இருக்கின்றன. சில துறைகள் பொதுமக்களோடு நேரடி தொடர்பில் இருக்கும் துறைகள். அதில் காவல்துறை மிக முக்கியமான துறை. காவல்துறை பணி என்பது அரசு பணி தான் என்றாலும், பொதுமக்களோடு மிக நெருக்கமாக பழகக் கூடிய வாய்ப்பு காவல்துறையினருக்கு இருக்கிறது.
எனவே, காவல்துறை பணி என்பது அரசு பணி என்பதை விட மக்கள் பணி என்றே கூறலாம். பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுடன் காவல்துறையை அணுகும் போது, போலீஸார் பரிவோடு அதனை கேட்டுத், தங்களால் முடிந்தவரை சட்டத்திற்கு உட்பட்டு அந்த செயலை செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்களிடமிருந்து பெரும் பாராட்டே காவல்துறைக்கு கிடைக்கும் மிக முக்கியமான பதக்கமாகும்.
சென்னை காவலில் 23,000 போலீஸார் பணி புரிகின்றனர். இதில் சிலர் தவறு செய்யும்போது, அர்ப்பணிப்போடு பணிபுரியும் காவல்துறையினர் அனைவருக்கும் அது இழுக்காக அமைகிறது. இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு போலீஸாரும் “நம்மால் நமது காவல்துறைக்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படக் கூடாது” என்று உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு காவல் ஆணையர் அருண் கூறினார்.
முன்னதாக, முதல்வரின் காவலர் பதக்கங்களை கூடுதல் காவல் ஆணையர்கள் கபில்குமார் சி.சரத்கர், கண்ணன், சுதாகர், நரேந்திரன் நாயர், ராதிகா ஆகியோரும் பகிர்ந்து வழங்கினர். மேலும், போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை காவல் ஆணையர் பெற்றுக் கொண்டார். இறுதியாக பதக்கம் பெற்ற காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.