புதுடெல்லி: பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலை முடித்துக் கொண்ட துறவிகளில் பலரும் வாராணசி, அயோத்திக்கு செல்கின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பமேளா நடைபெறுகிறது. இந்த விழா திரிவேணி சங்கம கரைகளில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. இதில் மகர சங்கராந்தி, மகா பவுர்ணமி, மவுனி அமாவாசை, வசந்த் பஞ்சமி, மகா சிவராத்திரி என மொத்தம் 6 வகையான ராஜ குளியல் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இவற்றில் 5-வது புனிதக் குளியல் கடந்த 3-ம் தேதி வசந்த் பஞ்சமியில் முடிந்தது.
இதையடுத்து மகா கும்பமேளாவில் உள்ள அகாடாக்களில் பறக்கும் தங்கள் ஆன்மிக காவிக் கொடிகளின் உயரத்தை துறவிகள் குறைத்துவிட்டனர்.
மொத்தம் உள்ள 13 அகாடாக்களில் 3 முக்கியப் பிரிவுகள் உள்ளன. இவர்களில் சைவர்கள் 7, வைராகிகள் மற்றும் உதாசிகள் தலா 3 அகாடாக்கள் உள்ளன. சைவர்களின் 7 அகாடா துறவிகள் வாராணசி சென்று காசி விஸ்வநாதரை தரிசிக்க உள்ளனர். இவர்கள் காசியில் பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி அன்று மாபெரும் ஊர்வலம் நடத்துகின்றனர். இவர்களில் சில அகாடாவினர், 15-ம் தேதி ஹரித்துவாரில் சிவனை தரிசிக்க செல்கின்றனர்.
அதன்பின்னர் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு துறவிகள் தங்கள் முகாம் களுக்கு திரும்புவார்கள். அயோத்தி ராமர் கோயிலுக்கு உதாசி மற்றும் சில வைஷ்ணவ அகாடாக்களின் துறவிகள் செல்வார்கள்.
இதனால், மகா கும்பமேளாவில் கூட்டம் குறைந்தாலும், மகா சிவராத்திரிக்கு பிறகே நிறைவடையும். இந்நாளில் வரும் ராஜ குளியலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அகாடாக்களுக்கு 7-ம் தேதி புதிய தலைவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அகாடாக்கள் நிர்வகிக்கும் கோயில்களுக்கான மஹந்த் எனும் தலைமைப் பண்டிதர்களும் அன்றைய தினம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த நடைமுறை முடிந்த பிறகு ஐதீக முறைப்படி, கடி மற்றும் பகோடி (மோர்குழம்பு மற்றும் பகோடா) சமைத்து உண்ட பின் பிரயாக்ராஜில் இருந்து கிளம்பி விடுவார்கள்.
மொத்தமுள்ள 12 அகாடாக்களில் சைவ அகாடாக்கள் பலம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இதில் போர் வீரர்களாகக் கருதப்படும் நாகா துறவிகள் இடம்பெற்றிருப்பதும், அதன் மடங்கள் மற்றும் கோயில்களுக்கான சொத்துக்கள் அதிகமாக இருப்பதும் இதற்கு காரணம். அகாடாக்களுக்கு நாடு முழுவதிலும் பல கோடி மதிப்புள்ள நிலங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.