புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் இன்று நிராகரித்துள்ளார்.
அவர் கூறுகையில், “மசாஜ் மற்றும் ஸ்பா நடத்தும் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தினால், அந்த கருத்து கணிப்புகளின் நிலை என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைத்து பாருங்கள். பிப்ரவரி 8ம் தேதி வரை காத்திருக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் புதன்கிழமை மாலை முடிவடைந்ததையடுத்து, வழக்கம்போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாயின. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, தலைநகரில் 27 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
டைம்ஸ் நவ் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி 32 முதல் 37 இடங்களையும், பாஜக 37-43 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது. என்டிடிவி வெளியிட்ட முடிவில் ஆம் ஆத்மி 10 முதல் 19 இடங்களையும், பாஜக 51-60 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தது. சிஎன்என் வெளியிட்ட முடிவில் ஆம் ஆத்மி 30 இடங்களையும் பாஜக 40 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்தது. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.