அஜர்பைஜான் நாட்டுத் தலைநகர் பாக்குவில் தன் மனைவி கயலுடன் (த்ரிஷா) வாழ்ந்து வருகிறார் அர்ஜுன் (அஜித் குமார்). இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகளான நிலையில், மனஸ்தாபங்கள் காரணமாக விவகாரத்து பெற விரும்புகிறார் கயல். அதற்கான காரணத்தையும், அதற்குப் பின்னாலுள்ள நியாயத்தையும் புரிந்துகொள்கிறார் அர்ஜுன். விவகாரத்து பெறும்வரை தன் தாய் வீட்டிலிருக்க முடிவெடுக்கும் கயலை அங்கே விட்டுவிட காரில் கூட்டிச் செல்கிறார் அர்ஜுன்.
ஊரோ, செல்போன் சிக்னலோ இல்லாத பாதையில், கார் பழுதாகி நின்றுவிடுகிறது. அங்கே தன் கன்டெயினர் லாரியில் வரும் ரக்ஷித்தும் (அர்ஜுன்), அவரது மனைவி தீபிகாவும் (ரெஜினா கஸண்ட்ரா) கயலை அழைத்துச் சென்று, அருகிலுள்ள ஹோட்டலில் விடுவதாகச் சொல்லி, அவரை ஏற்றிச்சொல்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு காணாமல் போகிறார் கயல். அவர் எங்கே போனார், மனைவியை அர்ஜுன் மீட்டாரா, அர்ஜுனுக்கும் அவருக்குமான உறவு இறுதியில் என்னவாகிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் ‘விடாமுயற்சி’.
![விடாமுயற்சி](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/ர்ரேர்.jpg)
மனைவியுடனான உறவை அணுகும்விதம், ஆர்ப்பாட்டமில்லாத காதல், பதற்றம், ஆற்றாமை என உணர்வுப்பூர்வமான நடிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார் அஜித் குமார். ஒன்றிரண்டு ஆக்ஷன் காட்சிகளைத் தவிர, வேறு ஆக்ஷன் காட்சிகள் இல்லாததால், அஜித் குமாரின் ஆக்ஷன் முகத்திற்குப் பெரிய வேலையில்லை. காதலைக் கொண்டாடுமிடத்திலும், தன் திருமண உறவு குறித்து உடைத்துப் பேசுமிடத்திலும், தன் அழுத்தமான நடிப்பால் கதாபாத்திரத்தை ஆழமாக்கியிருக்கிறார் த்ரிஷா.
ஆக்ஷனும் ஸ்டைலும் நிறைந்த பாத்திரமாக அர்ஜுன் தொடக்கத்தில் கவர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அவருக்குப் பெரிய வேலை இல்லாமல் போகிறது. தன் துடிப்பாலும், மிரட்டலான நடிப்பாலும் படத்தில் தனித்துத் தெரிகிறார் ரெஜினா கஸண்ட்ரா. ஆரவ், ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த வேலையை மட்டும் செய்து, அழுத்தமில்லாமல் வந்து போகிறார்கள்.
வெறும் மண்மேடுகளைக் கொண்ட அஜர்பைஜான் நாட்டுப் புறநகர் நிலவியலைத் தன் கேமரா கோணங்களாலும், கலர்டோனாலும் கடத்தி, இந்த சன்பென்ஸ், ஆக்ஷன் த்ரில்லருக்குப் பலம் சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ். ஆக்ஷனிலும், சேஸிங்கிலும், தொடக்கத்தில் வரும் பின்கதையைச் சுவாரஸ்யமான ‘கட்’களால் சொன்ன விதத்திலும் படத்தின் திரைமொழிக்கு வலுசேர்த்திருக்கும் என்.பி.ஶ்ரீகாந்த்தின் படத்தொகுப்பு, சோர்வடையும் சில இடங்களில் ஏனோ காட்சிகளை முடுக்கி விடத் தவறுகிறது.
அனிருத் இசையில், ‘பத்திக்கிச்சு’ பாடல் மட்டும் அஜித் குமாருக்கும் பார்வையாளர்களுக்கும் எனர்ஜி பூஸ்டர்! திரைக்கதையின் மீட்டரிலேயே ஆர்ப்பாட்டமில்லாமல் வரும் அனிருத்தின் பின்னணி இசை, சில ஆக்ரோஷ காட்சிகளில் மட்டும் ஒற்றை வெடியாக வெடித்திருக்கிறது. காருக்குள் நடக்கும் சண்டைக்காட்சியில் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷோடு சேர்ந்து, சண்டை வடிவமைப்பாளர் சுப்ரீம் சுந்தர் கொடுத்திருக்கும் உழைப்பை, விசில் சத்தத்தில் உணர முடிகிறது.
![விடாமுயற்சி படத்தில்... அஜித்](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/01/Untitled-1.jpg)
அர்ஜுன், கயல் இருவருக்குமிடையேயான காதல், திருமணம், திருமணத்திற்குப் பிந்தைய உறவுச் சிக்கல் போன்றவற்றைப் பேசியபடி தொடங்குகிறது படம். மூன்று காலகட்டத்தை விவரிக்கும் இந்தப் பகுதியில் அஜித் குமாரின் தோற்றம் முன்னுக்குப் பின்னாக இருப்பது, சிறிது குழப்பத்தைத் தந்தாலும், காதலையும், திருமணத்தையும் முதிர்ச்சியோடு அணுகிய விதத்தால், இப்பகுதி அழுத்தமாகப் பதிகிறது.
ஒரு பயணத்தில் தொடங்கும் பிரச்னை, அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்கள், பூதாகரமாகும் அதற்கான காரணம் என நகரும் திரைக்கதை, நேர்க்கோட்டிலேயே இறுதிவரை பயணிக்கிறது. இந்த நேர்க்கோட்டு அணுகுமுறையும், அஜர்பைஜானின் நிலப்பரப்பும் இந்த திரைக்கதையைத் தொடக்கத்தில் ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யமான திருப்பங்களும், ரசிக்க வைக்கும் காட்சிகளும் இல்லாததால், இடைவேளையிலேயே அயற்சி மோடுக்குச் செல்கிறது இந்த ‘முயற்சி’.
வெவ்வேறு கதாபாத்திரங்கள், அவற்றுக்கான பின்கதைகள் என ஆங்காங்கே கிளைக்கதைகள் முளைத்தாலும், அவை சஸ்பென்ஸ் த்ரில்லருக்கான மைலேஜை எங்குமே கூட்டவில்லை. மேலும், அஜித் குமார் கதாபாத்திரத்திற்குத் தொடக்கத்தில் கொடுக்கப்படும் பில்டப்புகளுக்கு நியாயம் செய்யும் வகையில், பிற்பாதியில் காட்சிகளே எழுதப்படவில்லை. அறிவுப்பூர்வமாகவும், சுவாரஸ்யமாகவும் அக்கதாபாத்திரம் எதுவுமே செய்யாதது ஏமாற்றமே!
![விடாமுயற்சி](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Screenshot_2024_04_04_162742.jpg)
சுவாரஸ்யம் கூட்டும் விசாரணைக் காட்சிகள், திரைக்கதையை ஆழமாக்கும் லேயர்கள், பட்டாசான திருப்பங்கள் என எதுவுமே இல்லாமல் அஜர்பைஜானின் வெறுமையான மண்மேடுகளைப் போலவே காட்சியளிக்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை. ரெஜினா பாத்திரத்தின் பிளாஷ்பேக் அபத்தமாகத் தெரிந்தாலும் அவர் நடத்தும் மைண்டு கேம், திருமண உறவுச் சிக்கலால் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லருக்குக் கிடைக்கும் கூடுதல் மைலேஜ் போன்றவை ஆறுதல்கள்.
டெக்னிக்கலாகவும், ஒன்லைனாகவும் ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யமும் மெனக்கெடலும் இல்லாத தட்டையான திரைக்கதையால் இந்த ‘விடாமுயற்சி’ ஆவரேஜ் முயற்சியாகவே மிஞ்சி நிற்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…