மதுரை: வைகை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த நாகராஜன், உயர்நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது.
தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை நதியில் கழிவுநீர் கலக்கிறது. வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி 2021-ல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தேன். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வைகையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஜி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, வைகை நதியில் கழிவு நீர் கலப்பதை தடுப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.
அரசு தரப்பில், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட வைகை நதி மீட்புக் குழு, வைகை நதியில் வாரம் தோறும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த அறிக்கை அடிப்படையில் வைகை நதியில் கழிவு நீர் கலப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்புக்குழு கூட்டம் ஒரு முறை மட்டுமே கூட்டப்பட்டுள்ளது. எனவே, வைகை ஆறு மீட்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து 5 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.