புதுடெல்லி: கடந்த 2022 முதல் தலைவர் இல்லாமல் மத்திய அரசின் தேசிய பசு நல அமைப்பு, தலைவர் இல்லாமல் இயங்குகிறது. இந்த தகவலை நேற்று நாடாளுமன்ற மக்களவையில் எழுந்த கேள்விக்கானப் பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தார்.
பசுக்கள் மற்றும் அவற்றின் சந்ததியினரின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை அமைப்பாக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் (ஆர்கேஏ-தேசிய பசுநல அமைப்பு) உள்ளது.
இது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின் கடந்த பிப்ரவரி 2019-ல் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த ஆர்கேஏ அமைப்பின் தலைமைப் பதவி, கடந்த 2022 முதல் காலியாகவே தொடர்கிறது. இதன் மீதான கேள்வியில், ‘2019-20 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் ஆர்கேஏவிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடி எவ்வாறு செலவிடப்பட்டது?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கான பதிலாக, மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், ‘ஆர்கேஏவின் தலைவர் பதவி பிப்ரவரி 2022 முதல் காலியாக உள்ளது. அது, பரிந்துரைத்த திட்டங்கள் எதுவும் 2019 முதல் செயல்படுத்தப்படவில்லை என்று நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்கேஏயின் எந்த திட்டத்தையும் அமைச்சகம் செயல்படுத்தவில்லை.
இதனால் ஆஎகேஏவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தொடாமல் விடப்பட்டுள்ளது. இது கால்நடைகள் மற்றும் எருமைகளின் பால் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ராஷ்ட்ரிய கோகுல் மிஷனின் ஒரு பகுதியாகவும் இருந்தது.’ எனத் தெரிவித்தார்.
ஆர்கேஏவின் முன்னாள் தலைவர் வல்லபாய் கத்ரியாவின் பதவிக்காலம் சர்ச்சையில் சிக்கியது. கடந்த அக்டோபர் 2020-ல், பசு சாணத்தால் ஆன “சிப்” ஒன்றை கத்ரியா வெளியிட்டார், இந்த சிப், கைப்பேசிகளில் இருந்து வரும் கதிர்வீச்சைக் குறைப்பதாகவும் அவர் கருத்து கூறி இருந்தார். இது எந்த அறிவியல் ஆதரவும் இல்லாத கூற்று எனச் சர்ச்சையாகி இருந்தது நினைவுகூரத்தக்கது.