IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்குது சர்ப்ரைஸ் – பலி ஆடு யார்?

IND vs ENG 1st ODI: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (India vs England) இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நாக்பூரில் முதல் போட்டியும், பிப்.9ஆம் தேதி கட்டாக்கில் 2வது போட்டியும், பிப். 12ஆம் தேதி அகமதாபாத்தில் 3வது போட்டியும் நடைபெறுகின்றன.

இந்திய அணி நீண்ட நாள் கழித்து ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. அப்படியிருக்க, இன்றைய போட்டியில் என்ன காம்பினேஷனில் இந்தியா விளையாடப்போகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

IND vs ENG 1st ODI: எங்கு, எப்போது பார்க்கலாம்?

இன்றைய போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். டாஸ் 1 மணிக்கு வீசப்படும். இன்றைய போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க், ஸ்போர்ட்ஸ் 18 1, ஸ்போர்ட்ஸ் 18 2, ஸ்போர்ட்ஸ் 18 3 ஆகிய சேனல்களில் நேரலையில் ஒளிப்பரப்பாகும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திலும் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

IND vs ENG 1st ODI: இங்கிலாந்து அணியின் காம்பினேஷன்

இங்கிலாந்து அணி அதன் பிளேயிங் லெவனை (Team England Playing XI) ஏற்கெனவே நேற்று அறிவித்துவிட்டது. பென் டக்கெட் மற்றும் பில் சால்ட் தான் ஓப்பனிங். ஹாரி ப்ரூக், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், ஜேக்கப் பெத்தல், லியம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பார்கள். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிரட்டிய பிரைடன் கார்ஸ் இதிலும் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்துவீச்சிற்கு ஜோப்ரா ஆர்ச்சர், ஷகிப் மஹ்மூத். சுழற்பந்துவீச்சுக்கு அடில் ரஷித்.

இங்கிலாந்து அணி வழக்கம்போல் ஆல்ரவுண்டர்களை நிரப்பி பிளேயிங் லெவனை எடுத்துள்ளது. அடில் ரஷித் மட்டுமின்றி லிவிங்ஸ்டன் தேவைப்பட்டால் ஜோ ரூட் ஆகியோரின் சுழற்பந்துவீச்சை கூட எதிர்பார்க்கலாம். பிரைடன் கார்ஸ் பந்துவீச்சில் கைக்கொடுத்தால் இந்திய அணிக்கு கூடுதல் நெருக்கடியே.

IND vs ENG 1st ODI: இந்திய அணியின் காம்பினேஷன்

நிலைமை இப்படியிருக்க, கடந்த 2023 உலகக் கோப்பையில் இந்திய பிளேயிங் லெவனில் (Team India Playing XI) ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா என முதல் 7 வீரர்களில் மாற்றமே இருக்காது எனலாம். இந்த போட்டியில் அக்சர் பட்டேல் விளையாடுவாரா அல்லது வாஷிங்டன் சுந்தர் விளையாடுவாரா என்பதும் கேள்வியாக உள்ளது. நிச்சயம் வருண் சக்ரவர்த்தி (Varun Chakaravarthy) விளையாடினால் குல்தீப் யாதவ் ஓரங்கட்டப்படுவார்.

IND vs ENG 1st ODI: பிளேயிங் லெவனில் சர்ப்ரைஸ்?

வருண் மற்றும் குல்தீப் இருவரையும் பிளேயிங் லெவனில் வைத்தால் ஒரே வேகப்பந்துவீச்சாளரையோ அல்லது ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரையோ பிளேயிங் லெவனில் இருந்து தூக்க வேண்டும். ஜெய்ஸ்வாலும் ஒரு ஓரமாக காத்திருக்க இன்றைய பிளேயிங் லெவனில் ஏதாவது சர்ப்ரைஸ் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

IND vs ENG 1st ODI: நாக்பூர் ஆடுகளம் எப்படி?

இது பெரிய பிரச்னைக்கு வழிவகுக்கலாம். இன்றைய நாக்பூர் ஆடுகளம் (IND vs ENG Pitch Report) பெரிதும் சுழற்பந்துவீச்சுக்கே சாதகமாக இருக்கும். ஆனால், தொடக்கத்தில் ஆடுகளம் புதிதாக இருக்கும்போது பேட்டர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இதனால், அதிக ஸ்கோரை எட்ட இரு அணிகளும் முயற்சிக்கும். இன்றிரவு பனிப்பொழிவுக்கு வாய்ப்பு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும் எனலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.