2010-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த ‘குஷி’ படம் ஓரளவிற்கு வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ‘Citadel’-ல் நடித்திருந்தார். அந்தத் தொடரில் சமந்தா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக நாக சைதன்யா குறித்த கேள்விக்கு சமந்தா அளித்த பதில் வைரலாகி வருகிறது.
நேர்காணலில் பேசிய சமந்தா, “திருமணம் மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டுமே பெண்ணின் முழுமைக்கு அர்த்தம் என்று இந்த சமூகம் கட்டமைத்துள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. தனிமையிலும் மகிழ்ச்சி சாத்தியம். பெண்கள் திருமணமாகி குழந்தைகள் பெற்று இருந்தால் தான் முழுமையானதாக சமூகத்தில் பார்கிறார்கள்.” என்றார்.
இதனைத்தொடர்ந்து கணவர் வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றபோது அல்லது வேறொரு உறவைத் தழுவியபோது எப்போதாவது ‘பொறாமை’ அடைந்திருக்கிறீர்களா என்று அந்த நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. “என் வயதில் இருப்பவர்கள் அதை செய்திருக்கவில்லை என்றால், நான் சோகமான மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள். அது தவறு” என்று தெரிவித்திருக்கிறார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “ நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமைதான். என்னிடம் அது இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொறாமை தான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர். மற்ற எல்லாம் பரவாயில்லை, ஆனால் பொறாமை என்பதற்கு மட்டும் என்னிடம் இடமில்லை” என்று கூறியிருக்கிறார். இதனிடையே சமந்தாவின் சமீபத்திய தோற்றமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.