புதுடெல்லி: தனது கையெழுத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் நிறைய முயன்றதாகவும், ஆனாலும் தனது கையெழுத்து சிறப்பானதாக மாறவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேர்வு காலம் நெருங்கி வருவதால் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியின் சுந்தர் நர்சரியில், மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களுக்கு தானே இனிப்புகளை வழங்கிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து அவர்களுடன் மிகவும் நெருக்கமான முறையில் உரையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் பகிர்ந்து கொண்ட ஒரு காணொளிக் காட்சியில், பிரதமர் மோடி மாணவர்களுடன் அவர்களின் தேர்வு தொடர்பான சந்தேகங்கள், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறித்து நகைச்சுவை உணர்வுடன் விவாதித்தார். தேர்வுகளுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்குவது குறித்து பிரதமர் சில முக்கிய ஆலோசனைகளையும் வழங்கினார்.
அப்போது, பிரதமர் தனது பள்ளி வாழ்க்கை தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். “நான் பள்ளியில் படிக்கும் போது, என் ஆசிரியர்கள் என் கையெழுத்தை மேம்படுத்த நிறைய முயற்சிகள் எடுத்தார்கள். இதனால், அவர்களின் கையெழுத்துத் திறன் மேம்பட்டிருக்கலாம், ஆனால் என்னுடையது மேம்படவில்லை என தெரிவித்தார்.
பிரதமர் மோடியைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், பிரதமருடன் பேசியது போல் உணரவில்லை, ஒரு நண்பருடன் பேசியது போன்று உணர்ந்தோம் என்று மாணவர்கள் கூறினர்.
கேரளா, பஞ்சாப், பிஹார், திரிபுரா என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் அச்சமின்றி பொதுத் தேர்வுகளை எழுதுவதற்கு ஊக்கமூட்டும் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “தேர்வு குறித்த கலந்துரையாடல் மீண்டும் வந்துவிட்டது, அதுவும் புதிய மற்றும் உயிரோட்டமான வடிவத்தில்! அனைத்து தேர்வு வீரர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் ‘தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025’ ஐ பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.