புதுடெல்லி: தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றநீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது நடந்த வாதம்: தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி, பி.வில்சன், அபிஷேக் சிங்வி: ஆளுநர் தனக்கு அனுப்பிய மசோதாக்களின் தன்மையை ஆராயாமல் ஒருவித வெறுப்பு உணர்வுடன் செயல்படுகிறார். குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வதானாலும், அதுபற்றி தமிழக அரசுடன் ஆலோசித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை. சட்டப்பேரவையில் மசோதாக்கள் குறித்து அரசு எடுத்த முடிவின்மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட முடியாது. தனது சொந்த விருப்பத்தையும் அதில் புகுத்த முடியாது. ஒரு மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். அவரது செயல்பாட்டால் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை. மாநில அரசின் அதிகாரத்தில் தேவையின்றி குறுக்கிட்டு மத்திய அரசின் ஏஜென்ட்போல செயல்படுகிறார். அரசியலமைப்பு சட்டம், உச்சநீதிமன்ற உத்தரவுகள், மாநில அமைச்சரவையின் முடிவுகள் ஆகியவற்றை மதிப்பதில்லை.
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி: ஆளுநரின் செயல்பாடுகள் கூடுதலாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி மட்டுமே வைத்தார். மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பவில்லை. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: ஆளுநரின் பதவி, அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அதேநேரம் மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள அவரது செயல்பாடு குறித்து மட்டுமே விசாரிக்கிறோம். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 14 மசோதாக்களில் இரண்டை மட்டும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது ஏன்? மற்ற 12 மசோதாக்களை 3 ஆண்டுகளாக ஆளுநர் ஆய்வு செய்கிறாரா? மசோதாக்கள் மறு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டால் கிடப்பில் போட்டு மவுனம் காப்பது ஏன்? குடியரசுத் தலைவர் அதில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆளுநரின் உண்மையான செயல்பாடு என்ன என்பது சட்டப்பேரவைக்கு எப்படி தெரியவரும்? அரசு செய்யும் விஷயங்கள் பிடிக்கவில்லை என்றால் அது ஆளுநரின் சொந்த கருத்துதானே? மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் நிறுத்திவைக்க அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை உள்ளதா? மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளி
வைத்தனர்.