புதுடெல்லி: “நாட்டுக்கு சவால் விடுக்கும் தேசவிரோத சக்திகள் தேசிய வாதத்துக்கும், பிராந்திய வாதத்துக்கும் இடையே மோதலை உருவாக்க முயற்சி செய்கின்றன. இதற்கு அவை தக்க பதிலடியை பெற வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் ரானேபென்னூரில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் தொடக்கவுரை ஆற்றிய அவர், “பிரிவினைவாதத்தின் வேர்களைப் பார்க்கும்போது இதில் தேசவிரோதச் சக்திகளின் கைகள் இருப்பதை நீங்கள் காணமுடியும். பருவநிலை மாற்றத்தை விடவும் மோசமான சவால்களை நாம் இதனால் எதிர்கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட எனக்குத் தயக்கமில்லை. சாதி, பிராந்தியவாதம் உட்பட பல பிரிவினைவாதங்கள் உள்ளன. இத்தகைய பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக எச்சரிக்கை தேவை.
சமீப ஆண்டுகளில் தேசவிரோத உணர்வுகளை அதிகப்படுத்த பணம் பயன்படுத்தப்படுகிறது. மற்ற நாடுகளில் நிகழாத வகையில் நீதித்துறை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. நாட்டுக்கு சவால் விடுக்கும் தேசவிரோத சக்திகள் தேசிய வாதத்துக்கும், பிராந்தியவாதத்துக்கும் இடையே மோதலை உருவாக்க முயற்சி செய்கின்றன. இதற்கு அவை தக்க பதிலடியை பெற வேண்டும்.
உலகில் எங்கே முதலீடு செய்ய முடியும், எங்கே வாய்ப்புகள் கிடைக்கின்றன, எங்கே திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்ற வினாக்களுக்கு விடையாக உலகின் முன்னணி நிறுவனங்களான ஐஎம்எஃப், உலக வங்கி போன்றவை இந்தியாவை எடுத்துக்காட்டுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.