சென்னை: அமெரிக்காவில் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தவறியதாக கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கை, கால்களில் விலங்கிட்டு சென்னையில் இன்று (பிப்.7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் உரிய அனுமதியின்றி வசித்து வந்த 104 இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மத்திய அரசு பாதுகாக்க தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்கவில்லை எனக் கூறி, மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலை, தாராபூர் டவர் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கை, கால்களில் விலங்கிட்டு தரையில் அமர்ந்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை கண்டன உரையாற்றி பேசியது:
“நமது இந்தியர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றிய அமெரிக்காவை கண்டித்து எந்தவித கண்டன அறிக்கைகளையோ, அமெரிக்கா செய்வது தவறு என்றோ சுட்டிக்காட்டாமல் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். இதுவரை அமெரிக்க தூதரை அழைத்து கூட கண்டனத்தை தெரிவிக்கவில்லை. உரிய அனுமதி இன்றி இந்தியாவில் தங்கும் வெளிநாட்டினரை, இந்தியா இவ்வாறு நடத்தியதில்லை.
அந்நாட்டின் காவல் துறை தலைவர், இந்தியர்களை இந்த உலகத்தின் ஏலியன்கள் என்று சொல்லுகிறார். அதையும் மோடி கண்டிக்கவில்லை. இந்தியர்களுக்கு விலங்கிட்டதை, நாட்டுக்கு ஏற்பட்ட தலைகுனிவாக பார்க்கிறோம். வெளியுறவு கொள்கையில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது. பாஜக அரசு, அமெரிக்காவிடம் தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும். ராஜ ரீதியான உறவுகளை முறிக்க வேண்டும்.
இதுபோன்று காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்தபோது, காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர்கள் இந்தியர்களை தலை நிமிர வைத்தார்கள். மன்மோகன் சிங் ஆட்சியில் எதிர்வினை ஆற்றியது போல் இவர்களால் எதிர்வினை ஆற்ற முடியவில்லை. அமெரிக்கா தவறு செய்திருக்கிறது என்பதை இவர்களால் பதிவு செய்ய முடியவில்லை இதை வன்மையாக காங்கிரஸ் கண்டிக்கிறது” என்று அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அசன் மவுலானா எம்எல்ஏ, மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் டி.செல்வம், மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், டில்லி பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.