அகமதாபாத்: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அதானி குழும தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, பாரம்பரிய முறைப்படி சூரத் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகன் திவா ஷாவை மணந்தார். இந்த திருமணம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனிப்பட்ட நிகழ்வாக இன்று (பிப்.7) நடைபெற்றது.
இந்நிலையில், திருமணத்தின் படங்களை கவுதம் அதானி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “இறைவனின் ஆசீர்வாதத்துடன், ஜீத்தும் திவாவும் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். இன்று அகமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படி திருமண சடங்குகள் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகள் மிகவும் சிறிய அளவில் செய்யப்பட்டது. எல்லோரையும் அழைக்க வேண்டுமென விரும்பினேன். இருந்தும் இது பிரைவேட் நிகழ்வு என்பதால் அது முடியாமல் போனது. அதற்கு நான் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் மகன் ஜீத் மற்றும் திவாவுக்கு உங்களது ஆசீர்வாதமும், அன்பும் வேண்டும்” என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆடம்பர திருமணத்துக்கு பதிலாக அதானி தரப்பில் சமுதாயத்துக்கு நன்கொடையாக நிதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் மகா கும்பமேளாவில் பங்கேற்ற கவுதம் அதானி, ஜீத்தின் திருமணம் எளிதானதாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்தில் உள்ள அதானி நகரமான சாந்திகிராமில் உள்ள கிளப்பில் இன்று மதியம் 2 மணிக்கு திருமண நிகழ்வு தொடங்கியது. ஜெயின் மற்றும் குஜராத்தி கலாச்சாரத்தின் படி திருமண சடங்குகள் நடந்தன. அதானி ஏர்போர்ட்ஸின் இயக்குனராக ஜீத் செயல்பட்டு வருகிறார்.
— Gautam Adani (@gautam_adani) February 7, 2025