ஜோலார்பேட்டை / சென்னை: ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). தையல் கலைஞர்களான இவர்கள், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், திருப்பூரிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர். தற்போது ரேவதி கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக சித்தூர் சென்ற ரேவதி, கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணம் செய்தார்.
இந்த ரயில் நள்ளிரவு 12.10 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்-கே.வி.குப்பம் இடையே சென்று கொண்டிருந்தபோது, ரேவதி கழிப்பறையை பயன்படுத்த சென்றுள்ளார். அப்போது, கழிப்பறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் ரேவதியை வழிமறித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் ரேவதி கூச்சலிடவே, சக பயணிகள் அங்கு வந்தனர். இதனால் ஆத்திரமைடந்த அந்த இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து ரேவதியை கீழே தள்ளிவிட்டு, வேறு பெட்டிக்கு மாறி தப்பியோடினார்.
ரயில் பயணிகள் அளித்த தகவலின்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த ரேவதியை மீட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேவதிக்கு கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டாக்டர்கள், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே காவல் ஆய்வாளர் (பொ) ருவந்திகா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதில், ரேவதியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த
ஹேமராஜ் (30) என்பது தெரியவந்தது.
இவர், 2022-ல் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் செல்போன் பறித்த வழக்கிலும், 2024-ல் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும், இருமுறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது. ஹேமராஜை கைது செய்தபோலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகளிர் ஆணையம் உத்தரவு: இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட கொடூர சம்பவத்தைக் கண்டிக்கிறோம். மகளிருக்கான பெட்டியில் பயணித்தபோதும் அவர் தாக்கப்பட்டிருப்பது, மாநிலத்தில் பெண்களின்
பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
இந்த விவகாரத்தை மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில், “தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தியதுடன், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்டவை அடங்கிய விரிவான அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைவர்கள் கண்டனம்: ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் பெண்கள் ரயிலில் கூட பயணிக்க முடியவில்லை என்ற நிலை வந்திருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களின் பாதுகாப்பில் கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாகும். கர்ப்பிணி என்று கூட பாராமல் பாலியல் தொல்லை அளித்துள்ள வக்கிர புத்தியுடைய கயவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்னும் அளவுக்கு, நமது சமூகம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பதற்கேற்ப கையாலாகாத ஆட்சியை நடத்திக் கொண்டு, குற்றவாளிகள் திமுகவினராக இருந்தால், அவர்களைக் காப்பாற்ற அரசு எந்திரத்தை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்தும் திமுகவின் வழக்கத்தால், இன்று சமூக விரோதிகளுக்கு, சட்டத்தின் மீதும் காவல்துறையின் மீதும் பயமில்லாமல் போய்விட்டது. பெண்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்பது முதல்வருக்கு உறுத்தவில்லையா?
பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது நல்லதல்ல. எத்தகைய குற்றங்களைச் செய்தாலும் அதிலிருந்து எளிதாக தப்பி விடலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு ஏற்பட்டிருப்பதுதான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தடையின்றி கஞ்சா விற்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம். பேருந்து நிலையங்கள், ரயில்கள் ஆகியவற்றில் காவல்துறை பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் சமீபகாலமாக சிறுமிகள், மாணவிகள், இளம்பெண்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி கொண்டே போகின்றன. சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க, குற்றச்செயலில் ஈடுபடுவோரை காவல் துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் சிறிதளவும் அக்கறையற்ற திமுக அரசால், அரசுப் பள்ளிகள், பொது இடங்கள், பொது போக்குவரத்து என அனைத்து இடங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளன.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.