புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் காரைக்கால், மாஹே, ஏனாம், அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகளில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என 59 கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக இருக்கின்றன. இவற்றில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த அனைத்துக் கல்லூரிகளிலும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை கடந்த ஆண்டிலிருந்து அமலில் இருக்கிறது. இந்தக் கல்லூரிகளில் 2025-26 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை 2024 டிசம்பர் மாதம் முடிந்த நிலையில், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அதே மாதமும், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி மாதமும் செமஸ்டர் தேர்வுகள் துவங்கின.
அதேபோல முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றிருக்க வேண்டிய செமஸ்டர் தேர்வு, ஜனவரி 31-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று தமிழ், இந்தி மற்றும் பிரெஞ்சு உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்துக் கல்லூரிகளிலும் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு நடக்கும் அறையில் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. அதைப் படித்துப் பார்த்த மாணவர்கள் அதிர்ந்து போயிருக்கின்றனர். காரணம், முதலாம் ஆண்டுக்கான முதல் செமஸ்டர் வினாத்தாளுக்குப் பதில், இரண்டாம் ஆண்டுக்கான 4-வது செமஸ்டர் வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டிருந்தது.
“வினாத்தாள்கள் தயாரிக்கவில்லை, வேறொரு நாளுக்கு ஒத்தி வையுங்கள்..”
இதுகுறித்து, மாணவர்கள் பேராசிரியர்களிடம் முறையிட்டதும், கல்லூரி நிர்வாகங்கள் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொண்டன. அப்போதுதான் முதல் செமஸ்டருக்கான வினாத்தாளை தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரிகள் தயாரிக்காமலே இருந்தது தெரிய வந்திருக்கிறது. அப்போது, `வினாத்தாள்கள் தயாரிக்கவில்லை. அதனால் மொழிப்பாடத் தேர்வுகளை வேறொரு நாளுக்கு ஒத்தி வையுங்கள், வினாத்தாள் தயாரானதும் மொழிப்பாடத் தேர்வுகளை நடத்திக் கொள்ளுங்கள்’ என்று மிகவும் அலட்சியமாக பதிலளித்திருக்கின்றனர். பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள். ஆனால் அந்த வாய்மொழி உத்தரவை ஏற்க மறுத்த கல்லூரிகள், எழுத்து மூலம் தெரிவிக்குமாறு கேட்டன.
`மழுப்பும் பல்கலைக்கழகம்..’
அதையடுத்து, `புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் நடைபெற இருந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தில் வேறுபாடுகள் இருப்பதாக, கல்லூரிகளில் இருந்து புகார்கள் வந்திருக்கின்றன. அதனால் நேற்று நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. தேர்வுக்கான தேதி பின்னர் தெரிவிக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து கல்லூரிகள் தரப்பில் பேசியபோது, `வினாத்தாள்களை மாற்றி அனுப்பும் வேலையை பல்கலைக்கழகம் தொடர்ச்சியாகவே செய்து வருகிறது. அதேபோல கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஒவ்வொரு செமஸ்டர்களையும் சரியான நேரத்தில் நடத்தாமல், ஆண்டுதோறும் காலதாமதமாகவே நடத்தி வருகிறது. தற்போது வினாத்தாளையே தயரிக்காமல் இருந்துவிட்டு, புதிய கல்விக் கொள்கையை காரணமாக கூறி மழுப்புகிறது பல்கலைக்கழகம்” என்றனர்.