சாலை பயணங்களில் தவிர்க்க இயலாத ஒன்று சுங்கச் சாவடி கட்டணம். தொழில் ரீதியாக அடிக்கடி பயணிப்போர், சொந்த காரணங்களுக்காக பயணம் மேற்கொள்வோர் என யாராக இருந்தாலும் சுங்கச் சாவடிகளை கடக்காமல் செல்ல இயலாது. இந்நிலையில் சில இடங்களில் சுங்க கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அருகருகிலேயே சுங்கச்சாவடிகள் இருப்பதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றனர். பயணம் முடித்து செலவினங்களை கணக்கிட்டால் சுங்கச்சாவடி கட்டணம் பெரும் பங்கு வகித்திருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொருமுறையும் காசு கட்டி சுங்க சாவடிகளை கடந்த போது இருந்த புலம்பல்களை விட FastTag வந்த பிறகு கண்ணுக்கு தெரியாமல் கட்டணம் கழிக்க படுவதால் கொஞ்சம் குறைந்திருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தனியார் கார் உரிமையாளர்களுக்கு வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி தனிநபர் வாகன உரிமையாளர்கள் 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டு ஓராண்டுக்கான “டோல் பாஸை” பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட ஓராண்டு காலத்திற்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் நாட்டின் எந்த ஒரு சுங்கச்சாவடியிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கார் உரிமையாளர்கள் 15 ஆண்டு காலத்திற்கு என மொத்தமாக 30 ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்திவிட்டு “லைஃப் டைம்” பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது சுங்கச் சாவடிகளை கடக்கும் உள்ளூர் மற்றும் அடிக்கடி பயணிப்பவர்களுக்கு மாதாந்திர பாஸ்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன அத்தகைய பாஸ்களுக்கு அவரவர்கள் முகவரி சான்று மற்றும் பிற விவரங்களை வழங்க வேண்டும். தற்போது இந்த பாஸ் மாதத்திற்கு ரூபாய் 340 என்ற கட்டணத்தில் வசூலிக்கப்படுகிறது . இதன் படி பார்த்தால் ஒரு வருடத்திற்கு ரூபாய் 4080 வரை செலவிடப்படும் பயனாளர்களுக்கு இனி ரூபாய் 3 ஆயிரம் என்பது கண்டிப்பாக பயனுள்ளதாவே இருக்கும்.
மேலும் நெடுஞ்சாலை பயனர்களுக்கு நிவாரணம் அளிக்க தனியார் கார்களுக்கான அடிப்படை சுங்க விகித கட்டணத்தை கிலோ மீட்டருக்கு என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கும் திட்டத்தையும் பரிசீலித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சுங்கச் சாவடிகளில் 2023-24 ஆம் ஆண்டில் மட்டும் 55,000 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் 8,000 கோடி ரூபாய் தனிநபர் வாகன உரிமையாளர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் பாஸ்டேக் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளில் 53 சதவீதம் தனிநபர் வாகனங்களில் தான் நடக்கிறது. ஆனால் இவ்வாறு வசூல் செய்யப்பட்ட மொத்த தொகையில் 21 சதவீதம் மட்டுமே தனி நபர் வாகனங்களில் இருந்து பெறப்படுகிறது. மேலும் இதுபோன்ற தனிநபர் வாகனங்கள் பெரும்பாலும் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிக்குள்தான் சுங்கச் சாவடிகளை கடக்கின்றன. இவ்வாறு ஓராண்டு மற்றும் 15 ஆண்டுகளுக்கான பாஸ்களை வழங்குவதன் மூலம் அரசுக்கு எந்த ஒரு இழப்பீடும் ஏற்படாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த புதிய திட்டத்தின் மூலம் பெறப்படும் கட்டண அட்டைகள் ஏற்கனவே உள்ள FastTag உடன் இணைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கூடவோ, குறைத்தோ.. சுங்க கட்டணம் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது ஒன்று என்றாகிவிட்ட நிலையில்… பழுதடைந்த சாலைகளையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு சீரமைத்தால் பயனர்கள் கொஞ்சம் மனசை தேற்றிக்கொண்டு சுங்கச்சாவடிகளை கடந்து செல்வார்கள்.