ஜுனோவ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உனலக்லீட் விமான நிலையத்தில் இருந்து நோம் நகருக்கு செஸ்னா 208பி என்ற ரக விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது. பெரிங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் விமானி உள்பட 10 பேர் பயணித்தனர்.
நார்டன் சவுண்ட் அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றபோது அங்கு கடும் பனிப்பொழிவு நிலவியது. எனவே விமானத்தை இயக்குவதில் விமானிக்கு சிக்கல் ஏற்பட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து விமானி, உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அதற்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனால் விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டது.
இதன் பிந்னர் கடைசியாக விமானத்தின் சிக்னல் கிடைத்த இடத்துக்கு அமெரிக்க மீட்புப் படையினர், கடற்படையினரும் விரைந்தனர். பின்னர் மாயமான விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. தேடுதல் பணியின் அலாஸ்கா பகுதியில் பனிக்கட்டிகள் சூழ்ந்த இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்து விட்டனர் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் அடுத்தடுத்து 2 விமான விபத்து சம்பவங்கள் நடந்து 69 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.