கோவையை தலைமையிடமாகக் கொண்ட கோவை.கோ என்ற ஏ.ஐ ஸ்டார்ட் அப் ஒன்று தங்களின் நிறுவன ஊழியர்களுக்கு 14.5 கோடி போனஸ் வழங்கியிருக்கிறது.
இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தை 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் தொடங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தில் மொத்தமாக 140 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
`Together we grow’ என்ற திட்டத்தின்படி 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் மூன்றாண்டு சேவை முடிந்ததும் அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்திலிருந்து 50 சதவீதம் போனஸாக வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம். அதை தற்போது செய்தும் காட்டியிருக்கிறது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரவணக்குமார், “நான் முதலில் ஐ.டி-யில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த நேரத்தில் மார்க்கெட்டில் ஒரு இடைவெளியைக் கண்டேன். அதன் பிறகு இந்த ஸ்டார்ட் அப்பை தொடங்க முடிவு செய்தேன். இந்த நிறுவனம் முழுவதும் வெளி நிதியுதவி எதுவுமில்லாமல் இயங்கி வருகிறது. நான் எனது பணியாளர்களுக்கு ஒரு உறுதியான விஷயத்தை கூற விரும்பினேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஆண்டுகள் இந்த நிறுவனத்தில் இருங்கள். நான் உங்களுக்கு ஜனவரி 2025-ல் ஆறு மாத சம்பளத்தை போனஸாக வழங்குவேன் எனக் கூறியிருந்தேன். அதுதான் தற்போது நடந்திருக்கிறது. பணியாளர்களுக்கு போனஸ் கொடுப்பதற்காக என்னுடைய புக்காட்டி காரை விற்பனை செய்துவிட்டேன்!” எனக் கூறியிருக்கிறார்.