ஒட்டாவா: “கனடாவை அபகரித்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்வதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டும் ஆர்வம் நிஜமானது.” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடா பிரதமர் பதவியில் இருந்து விரைவில் வெளியேற இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைப்பதற்கு ட்ரம்ப் காட்டும் ஆர்வத்தினை சுட்டிக்காட்டி தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ட்ரம்ப் நிர்வாகம் நம்மிடம் எத்தனை முக்கியத்துவமான கனிம வளங்கள் உள்ளன என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் அடிக்கடி நம்மை அமெரிக்காவுடன் இணைத்து அதன் 51வது மா்நிலமாக மாற்றுவது பற்றி பேசி வருகிறார்கள் என்று நான் உங்களுக்கு கூறிக்கொள்கிறேன்.
அவர்கள் நமது வளங்களைப் பற்றியும், நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பதுடன் அவற்றின் பயன்களை அடையவும் விரும்புகிறார்கள். அதனைச் செய்வதற்கான ஒரே வழி கனடாவை அமெரிக்காவுக்குள் ஐக்கியம் ஆக்குவது தான் என்று ட்ரம்ப் புரிந்து வைத்துள்ளார்.” என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பேசிய ட்ரூடோ நிர்வாக அமைச்சர்கள் கனடாவுக்கான தங்களின் ஆதரவினை உறுதி செய்தனர். தொழில்துறை அமைச்சர் ஃபிரான்சுவா பிலிப் ஷாம்பெயின், “நமது அமெரிக்க நண்பர்கள் பொருளாதார பாதுகாப்புக்கு, எரிசக்தி பாதுகாப்புக்கு, தேசிய பாதுகாப்புக்கு அவர்களுக்கு கனடா தேவை என்பதை புரிந்து வைத்துள்ளார்கள்.” என்றார்.
கனடாவின் இறையாண்மை குறித்த கவலைகளை எடுத்துரைத்த வர்த்தகத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், “எல்லையில் எந்தவிதமான குழப்பமும் இருக்காது.” என்றார். வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னான், “கனடா சுதந்திரமான நாடு, இறையாண்மை கொண்ட நாடு, கனடாவின் விதியை அதுவே தீர்மானித்துக்கொள்ளும். மிக்க நன்றி.” என்று தெரிவித்தார்.
அமெரிக்கா இறக்குமதி செய்யும் அனைத்து கனடா பொருள்களுக்கும் 25 சதவீதம் வரிவிதிக்கும் ட்ரம்ப்பின் முன்மொழிவால் ஏற்படக்கூடிய தாக்கத்தை சமாளிக்க கனடா தயாராகி வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதிக வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்த அமெரிக்க அதிபர் பேச்சு வார்த்தைக்காக கனடாவுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார்.
பசுமை சக்திக்கான முக்கிய தேவைகளான லித்தியம், க்ராபைட், நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் போன்ற தாதுக்கள் கனடாவில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.