வயநாடு: டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு பாஜக தயாராகி வரும் நிலையில், “டெல்லி மக்கள் மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளனர். அவர்கள் சலிப்படைந்து விட்டனர்” என்று கூறியுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ”காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக கேரளாவுக்குச் சென்றுள்ள வயநாடு எம்.பி.பிரியங்கா காந்தி அங்கு செய்தியாளர்களிடம் கூறும்போது, “டெல்லி தேர்தலுக்கு முன்பாக நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் மக்கள் மாற்றத்தை விரும்புவதை உணர முடிந்தது. டெல்லியில் நடந்தவற்றை பார்த்து மக்கள் சலிப்படைந்து விட்டனர். அவர்கள் மாற்றத்தை விரும்பினர். மாற்றம் வேண்டி வாக்களித்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மற்றபடி, எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். களத்தில் நின்று வேலை செய்து மக்கள் பிரச்சினைகளுக்கு போராட வேண்டும் என்று உணர்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மாலை 4 மணி நிலவரப்படி 35 தொகுதிகளில் வெற்றி, 13 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் பாஜக உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி 16 தொகுதிகளில் வெற்றி 6 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கவில்லை.