சென்னை: சென்னை விமான நிலையத்தில் கூடுதல் எடைக்காக இலங்கை புதுமணப் பெண்ணிடம் 11 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறிமுதல் செய்த பெண் சுங்கத்துறை அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, இதேபோல மற்றொரு பெண் பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 10 தங்க வளையல்களை திருப்பிக் கொடுக்கவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்ற பெண்ணுக்கும், பிரான்ஸில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜெயகாந்த் என்பவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு மதுராந்தகத்தில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு ஜெயகாந்த் பிரான்ஸ் நாட்டுக்கும், தனுஷிகா இலங்கைக்கும் சென்றுள்ளனர்.
தனது மனைவியை பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக ஜெயகாந்த் பிரான்ஸில் இருந்தும், தனுஷிகா இலங்கையிலிருந்தும் சென்னைக்கு வந்து, சில நாட்கள் தங்கியிருந்து முக்கிய கோயில்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கடந்த டிசம்பரில் தனுஷிகா தனது மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவினர்களுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது தனுஷிகாவின் கழுத்தில் இருந்த தங்க தாலிச் சங்கிலியைப் பார்த்த பெண் சுங்கத்துறை அதிகாரியான மைதிலி, அந்த தாலிச் சங்கிலி கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி அதை பறிமுதல் செய்தார்.
பெண்களுக்கு புனிதமானது: தாலிச் சங்கிலியை பறிகொடுத்த தனுஷிகா இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்துள்ள உத்தரவில், “பொதுவாக தாலிச்சங்கிலி என்பது நம் நாட்டின் கலாச்சாரத்தைக் கொண்ட இந்துமதப் பெண்களுக்கு புனிதமானது.
விசாரணை என்ற பெயரில் அதை கழட்டச் சொல்லி பறிமுதல் செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று; கண்டனத்துக்குரியது. எனவே சம்பந்தப்பட்ட சுங்கத்துறை பெண் அதிகாரி மீது உயரதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மனுதாரரிடமிருந்து பறிமுதல் செய்துள்ள தாலிச் சங்கிலியை திருப்பிக்கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.
10 வளையல்கள்: இதேபோல சென்னையைச் சேர்ந்த சபீனா முகமது மொய்தீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு அபுதாபியில் இருந்து கடந்த 2023-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்துக்கு குடும்பத்தினருடன் வந்தேன். அப்போது நான் கையில் அணிந்lfருந்த 135 கிராம் எடையுள்ள 10 தங்க வளையல்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். எனவே அந்த வளையல்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கையும் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, “இந்த 10 தங்க வளையல்களுக்கு சுங்கவரியாக ரூ.7.60 லட்சம் செலுத்த வேண்டுமென்ற அதிகாரிகள் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. திருமண நிகழ்வின்போது தங்க நகைகளை அணிந்து கொள்வது இயல்பான ஒன்றுதான்.
வெளிநாட்டில் இருந்து வரும் விமானப் பயணிகள் 10-க்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிந்து இருந்தாலோ மறைத்து வைத்திருந்தாலோ அதை அதிகாரிகள் பறிமுதல் செய்யலாம். மனுதாரர் வெளிப்படையாக அந்த வளையல்களை தனது கையில் அணிந்து வந்துள்ளார். எனவே பறிமுதல் செய்துள்ள அந்த தங்க வளையல்களை அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.