புதுடெல்லி: டெல்லி தேர்தல் முடிவு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர் அளித்த பதிலில், “உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் பிரதமர் மோடியின் தலைமையில் மக்களுக்கு சேவையாற்றும் ஓர் அரசை டெல்லி பெற வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தோம். 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய இது காலத்தின் தேவையாகும்.
இந்தியாவின் தேசிய தலைநகரில் அதன் மக்களின் நலனுக்காக செயல்படும் ஓர் அரசு இருக்க வேண்டும். நாட்டுக்காக பிரதமர் வகுத்துள்ள பயணப் பாதை டெல்லியை முதன்மையானதாக மாற்றும், அதன் மக்களுக்கு எல்லா கோணங்களிலும் இருந்தும் சேவையாற்றும் என உறுதியாக நம்புகிறேன். அடிப்படை கட்டமைப்பு, பள்ளிகள், மருத்துவமனைகள், சுகாதாரம் என அனத்து துறைகளும் வளர்ந்த இந்தியா லட்சியத்துக்கு ஏற்ப மாற்றம் பெறும் என நம்புகிறேன்” என்றார்.
பிறகு எக்ஸ் தளத்தில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில், “பாஜக மீது மீண்டும் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்திய டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலிலும் ஜே.பி.நட்டாவின் தலைமையிலும் டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய எங்களை அர்ப்பணித்துக் கொள்கிறோம். பாஜக தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.