‘டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜகவின் அத்துமீறல்களும் நிறுத்தப்படும்’ –  மணீஷ் சிசோடியா

புதுடெல்லி: “தேர்தல் முடிவுகள் வெளியானதும் பாஜகவின் அனைத்து அத்துமீறல்களும் நின்றுவிடும்.” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் நாளை (சனிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் 70 பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீட்டில் ஒன்று கூடினர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை பாஜகவில் சேர்க்க முயற்சிக்கும் ஆபரேஷன் லோட்டஸ் புகார் எழுந்ததன் பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

டெல்லி முதல்வர் அதிஷி, மணீஷ் சிசோடியா, டெல்லி அமைச்சர் இம்ரான் ஹுசைன் உள்ளிட்ட பல ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள், காலை 11.30 மணிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் கூடியதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டம் மதியம் 12.45-க்கு நிறைவடைந்தது.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, “துஷ்பிரயோகம் கட்சி (பாஜக), பணம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் அடிப்படையில் தான் தேர்தல்களை சந்தித்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானதும் அவர்களது (பாஜக) அனைத்து அத்துமீறல்களும் நின்றுபோகும்” என்று தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை நாளில் விழிப்புடன் இருக்கும்படியும், ஆம் ஆத்மி வேட்பாளர்களை கட்சி மாற்ற முயற்சிக்கும் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில், அவர்களைத் தொடர்பு கொள்ளும் பாஜக தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யும் படியும், ரகசிய காமிராக்கள் மூலம் சந்திப்புகளை பதிவு செய்யும் படியும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

வேட்பாளர்களின் சந்திப்பு கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், “டெல்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளருமான முகேஷ் குமார் அஹ்லாவத்-க்கு வியாழக்கிழமை அழைப்பு வந்த எண் குறித்து விசாரிக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் ஏழு பேருக்கு பாஜக ரூ.15 கோடி கொடுக்க முன்வந்ததாக வியாழக்கிழமை சஞ்சய் சிங் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து வேட்பாளர்களின் இந்தக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. டெல்லி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளில், வேட்பாளர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல், அவர்களை அணி மாறுவதற்காக பாஜக தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிலவியது. தலைநகரில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முயலும் ஆம் ஆத்மிக்கும், மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டிய பாஜகவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

இதனிடையே, தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகள், தலைநகரில் 27 ஆண்டுகளுக்கு பின்பு பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவித்திருந்தன. இந்த கணிப்புகளின் உண்மைத்தன்மையைச் சாடியிருந்த ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், வேட்பாளர்களை அணி மாற்ற முயற்சிக்கும் குற்றச்சாட்டினை தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.