புதுக்கோட்டை: “பக்தியை வைத்து தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது” என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக தெற்கு மாவட்டத்தின் சார்பில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து இன்று (பிப்.8) இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: “தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை, பாரபட்சமின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு தனது பட்ஜெட்டில் வரி குறைவாக செலுத்தும் மாநிலங்களுக்கு நிதி அதிகமாகவும், அதிகம் வரி செலுத்தும் தமிழகத்துக்கு நிதி குறைவாகவும் ஒதுக்கி பாரபட்சத்தோடு மத்திய அரசு நடந்து கொண்டுள்ளது.மோடி பிரதமரான பிறகுதான் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.புதிய ரயில்வே திட்டங்கள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டங்கள் எதுவும் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.
திமுக அரசு மீது வீண் விமர்சனங்களை முன்வைக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அரசிடம் இருந்து ஒரு திட்டத்தையாவது பெற்றுத் தந்தாரா? தமிழக அரசுக்கு எதிராக எந்தக் குறையையும் யாரும் சொல்லவில்லை. மக்களின் ஆதரவு அலைதான் வீசுகிறது. பக்தியை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி விட முடியாது. ஏனெனில், அவர்கள் பழநிக்கு பாதயாத்திரையும் செல்வார்கள். திராவிட மாடல் அரசுக்கு வாழ்த்தும் சொல்வார்கள்” என்றார். இதேபோல, திமுக வடக்கு மாவட்டம் சார்பில் விராலிமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சர்ச்சை: வடக்கு மாவட்டத்தின் சார்பில் விராலிமலையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நோட்டீஸில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மெய்யநாதன் பெயர் இடம் பெற்றிருந்த நிவையில், ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட திமுக தெற்கு மாவட்டத்தின் சார்பில் அறந்தாங்கியில் நடைபெற்ற பொதுக்கூட்ட நோட்டீஸில் அமைச்சர் மெய்யநாதன் அச்சிடப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் கடந்த 2 நாட்களாக எதிர்ப்புகளை தெரிவித்தனர்.