அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
டெல்லி மக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளனர். தங்களின் சரியான ஆலோசனை திறனால் டெல்லி மக்கள் எடுத்துள்ள இந்த முடிவு நம் நாட்டின் தலைநகரின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும். சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் அரசியல் மாசுபாட்டை டெல்லி மக்கள் நிராகரித்துள்ளனர்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மதுபான மாஃபியா உருவானது. இதே நிலைதான் டெல்லியிலும் ஏற்பட்டது. ஆந்திரா மற்றும் டெல்லியில் வசிக்கும் மக்கள் தங்களின் வாக்குகளால் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து தங்களை காப்பாற்றிக் கொண்டனர்.
நம் நாடு 2047-ல் உலகிலேயே ஒரு உன்னதமான நிலைக்கு செல்லும். டெல்லி தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எதிரொலித்துள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறுகையில், “2047-ல் நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இருப்பது உறுதி. இரட்டை இன்ஜின் அரசின் ஆட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சியை மக்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர். இந்த நம்பிக்கையே டெல்லி தேர்தலில் எதிரொலித்துள்ளது. அமித் ஷாவின் சாணக்கியத்தனம், பிரதமர் மோடியின் திறன்மிக்க ஆட்சி டெல்லி தேர்தலின் முடிவுகளை காட்டுகின்றன” என்றார்.