ஈரோடு கிழக்கில் முதன்முறையாக வென்ற திமுக – அதிக வாக்கு வித்தியாசத்தால் திமுகவினர் உற்சாகம்

ஈரோடு: தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, ஈரோடு கிழக்கு தொகுதியில் முதன்முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார், இதுவரை இல்லாத அளவு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது திமுக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பவானிசாகர் அணை உருவாக காரணமாக விளங்கிய தியாகி ஈஸ்வரனில் தொடங்கி, 1951-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பிற்கு பின் இந்திய பொதுவுடமைக்கட்சியின் ராஜூ, காங்கிரஸ் வி.எஸ்.மாணிக்கசுந்தரம், ஏ.எஸ்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக ‘ஹாட்ரிக்’ வெற்றி: திமுக உதயமான பின், மு.சின்னச்சாமி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஈரோடு எம்.எல்.ஏ. பதவியை அலங்கரித்தனர். அதிமுக உதயமான பின், ஈரோடு தொகுதி அக்கட்சியின் வசமானது. தற்போதைய திமுக அமைச்சரான சு.முத்துசாமி, அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு, ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றார்.

அதன்பின், 1989ல் ஈரோடு தொகுதி மீண்டும் திமுக வசமானது. அக்கட்சியின் வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார்.அதன்பின், அதிமுக சார்பில் மாணிக்கம், திமுக சார்பில் என்.கே.கே.பெரியசாமி, அதிமுக கே.எஸ். தென்னரசு, திமுக என்.கே.கே.பி. ராஜா என மாறி மாறி இரு கட்சிகளும் வென்றன.

தொகுதி மறுசீரமைப்பு: கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி உருவாக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டதும், 2011ல் நடந்த முதல் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார்.

அடுத்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த தென்னரசு வெற்றி பெற்றார். 2021 தேர்தல் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மறைவிற்கு பின் 2023-ல் வென்ற ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி முதன் முதலாக திமுக வசமாகியுள்ளது.

இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு கிழக்கில் கடந்த 2016-ல் 7794 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் தென்னரசுவும், 2021-ல் 8 ஆயிரத்து 904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெராவும் வென்றனர். அதன்பின் 2023-ல் நடந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன், 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

போராட்ட வரலாறு: கடந்த 2011 பொதுத்தேர்தலில் தேமுதிக சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்ட சந்திரகுமார், 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற முடிந்தது. அப்போதைய அதிமுக அரசுக்கு எதிரான செயல்பாடுகளால், சுமார் இரண்டரை ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தற்காலிக தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அதன்பின் உச்சநீதிமன்றம் வரை சென்று தனது எம்.எல்.ஏ. பதவியை சந்திரகுமார் நிலைநாட்டினார். தற்போது பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றிக்கு அச்சாரம் போட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.