மும்பை,
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கெரியரின் இறுதி கட்டத்தில் இருக்கும் இருவரும் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகின்றனர். இதனால் இந்த தொடரில் எழுச்சி பெற்று கோப்பையை வென்று கொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி நிச்சயம் 3 சதங்களை விளாசுவார் என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “விராட் கோலி ஒரு வீரராக இன்னும் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. அவர் என்னை பொறுத்தவரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக விளையாடுவார். அதிலும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது அவருக்கு பிடித்த ஒன்று. அதனால் நிச்சயம் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். பொதுவாகவே ஐ.சி.சி. தொடர்களில் ரன் குவித்து வரும் அவர் கடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். அந்த வகையில் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் 3 சதங்களை விளாசுவார்” என்று கூறினார்.