சுவீடன்: அரச குடும்ப தம்பதிக்கு பெண் குழந்தை

ஸ்டாக்ஹோம்,

சுவீடன் நாட்டின் அரசராக இருப்பவர் கார்ல் கஸ்டாப். இவருடைய மகனான கார்ல் பிலிப், கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சோபியா ஹெல்க்விஸ்ட்டை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு அலெக்சாண்டர், கேப்ரியல் மற்றும் ஜூலியன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சோபியா கர்ப்பிணியானார். இதனால், அவர்களுடைய குடும்பம் 4-வது குழந்தையை எதிர்பார்த்து இருந்தது.

இந்த சூழலில், சுவீடனின் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்து உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்த, இந்த தம்பதியின் 4-வது குழந்தையின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியிடப்படவில்லை. எனினும், 3,645 கிராம் எடையுடன், 49 சென்டி மீட்டர் உயரத்துடன் இளம் இளவரசி இருக்கிறாள் என அரச குடும்ப தம்பதி தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, சுவீடன் பிரதமர் உல்ப் கிரிஸ்டர்ஸ்சன் மற்றும் அரசாங்கம் சார்பில் அரச குடும்ப தம்பதிக்கு வாழ்த்து செய்தி தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள் என அவர் தெரிவித்து உள்ளார்.

நாட்டின் தலைவராக அரசர் இருக்கிறார். ஆனால், அரசியல் ரீதியாக அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை. நாட்டில் சமத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டபோதும், மக்களிடையே அரச குடும்பம் பரவலாக ஆதரவை பெற்றிருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.