புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் அக்கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜக 68 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 2 இடங்களிலும் போட்டியிட்டன.
வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 1993-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1998 வரை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மதன்லால் குரானா, சாகிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அடுத்தடுத்து முதல்வராக பதவி வகித்தனர். 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2020 தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மிக்கு தற்போது 22 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அந்த தொகுதியில் பாஜக மூத்த தலைவர் பர்வேஷ் சாகிப் சிங் 30,088 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஜங்கபுரா தொகுதியில் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். டெல்லி முதல்வர் ஆதிஷி, கல்காஜி தொகுதியில் 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் ‘ஹாட்ரிக்’ தோல்வி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், 68 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். டெல்லியில் காங்கிரஸை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர்.
இதற்கிடையே, தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டு ‘ஜெய் ஸ்ரீராம்’ என உற்சாகத்துடன் கோஷமிட்டனர். அங்கு மாலையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து டெல்லி விடுதலை அடைந்துள்ளது. சர்வாதிகாரம். ஆணவத்தை தோற்கடித்து, வளர்ச்சி, நல்லாட்சிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன்.
இண்டியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒட்டுண்ணியான காங்கிரஸை ஓரம்கட்ட தொடங்கி விட்டன. பாஜகவின் நல்லாட்சியை விரும்பும் மக்கள் மீண்டும், மீண்டும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் சவாலாக இருந்த சட்டம் – ஒழுங்கு நிலை நாட்டப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் வறட்சி நிலை மாறி, விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஹரியானாவில் லஞ்ச ஊழல் ஒழிக்கப்பட்டு, ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் அரசு பணி கிடைக்கிறது. வேளாண் உற்பத்தி மையமாக குஜராத் உருவெடுத்துள்ளது. பிஹாரில் பல்வேறு மாற்றங்களை முதல்வர் நிதிஷ்குமார் ஏற்படுத்தியுள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து செல்கின்றன.
இனி இரட்டை இன்ஜின் வேகத்தில் டெல்லி யும் வளர்ச்சி அடையும். யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப் படும். ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக பாஜக அரசு பாடுபடும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
காரணங்கள் என்னென்ன? – டெல்லியில் மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தி மதுவிற்பனையை தனியாரிடம் ஒப்படைத்த ஆம் ஆத்மி அரசு அதன் மூலம் அடைந்த ஆதாயத்தை கோவா தேர்தலில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை ஆம் ஆத்மி மறுத்தது.
இந்த ஊழல் வழக்கில் சிக்கி டெல்லி துணை முதல்வராக இருந்து மணீஷ் சிசோடியா கைதாகி சிறை சென்றார். அதன்பின் இந்த வழக்கில் முதல்வராக இருந்த அர்விந்த் கேஜ்ரிவால் கைதாகி சிறை சென்றார்.
ஆம் ஆத்மியின் எளிமை என்ற முத்திரை, மதுபான கொள்கை ஊழல், ராஜ்மஹால் சம்பவங்களால் மறைந்தது. வாக்காளர்களுக்கு இரட்டை இன்ஜின் வளர்ச்சி வாக்குறுதியை அளித்தது பாஜக.
பெண்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தது. பிப்ரவரி 8-ம் தேதி பாஜக வெற்றி பெறும். மார்ச் 8-ம் தேதி பெண்கள் தினத்தில் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.2,500 உதவித் தொகை செலுத்தப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.
மேலும், மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டதும், டெல்லி வாக்காளர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இது டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியை கைப்பற்ற வழிவகுத்தது.