புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வர் அதிஷி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் அதிஷி வழங்கினார்.
நடந்து முடிந்த டெல்லி பேரவைத் தேர்தலில் டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி, 48 இடங்களில் வென்று வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. இதன்மூலம் 26 ஆண்டுகளுக்கு பின்பு அக்கட்சி தேசிய தலைநகரில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வென்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து டெல்லியின் மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாமல், தொடர் தோல்வியை பதிவு செய்துள்ளது.
இந்த பின்னணியில், தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளான இன்று டெல்லி முதல்வர் அதிஷி, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை இன்று காலையில் சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு பதவியேற்கும் வரை முதல்வராக தொடர கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, டெல்லி சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் உத்தரவிட்டார். இது தொடர்பான உத்தரவு அறிக்கை கடந்த 7ம் தேதி ஆளுநர் மாளிகை மூலம் வெளியிடப்பட்டது. சட்டப்பேரவை கலைப்பு 8ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அது குறித்த தகவல் இன்றுதான் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
டெல்லி கல்காஞ்சி தொகுதியில் போட்டியிட்ட அதிஷி, தொடக்க நிலை பின்னடைவுகளைச் சமாளித்து தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.
மதுபான ஊழல் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், அதிஷியின் முன்னவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிஷி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2025 டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற ஐந்து பெண்களில், முன்னாள் முதல்வர் அதிஷியும் ஒருவர், மற்றவர்கள் பாஜகவைச் சேர்ந்த பெண் வேட்பாளர்கள். ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெற்றி பெற்றிருக்கும் ஒரே பெண் அதிஷி என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2020 தேர்தலில் மொத்தம் 8 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்தமுறை டெல்லி தேர்தல் களத்தில் இருந்த 699 வேட்பாளர்களில் 96 பேர் பெண்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு (2020) களத்தில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், அவர்களில் 76 பேர் பெண்கள். இந்த முறை டெல்லி தேர்தலில் நிலவிய மும்முனைப் போட்டியில், ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவை தலா ஒன்பது பெண் வேட்பாளர்களை நிறுத்தின. காங்கிரஸ் கட்சி 7 பெண்களை போட்டியிட வைத்தது. கடந்த 2020 தேர்தலை விட இந்த முறை மூன்று கட்சிகளும் அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன.