சென்னை: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் நாட்டின் மக்கள் தொகை விகிதத்துக்கேற்ப சமூக பன்முகத்தன்மை மற்றும் பட்டியலின, பழங்குடியின. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பிரதிபலிக்க சட்டதிருத்தம் மேற்கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தி திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த மசோதாவி்ல் கூறியிருப்பதாவது: ”நீதித்துறை நியமனங்களை சீர்திருத்தம் செய்வதற்கும், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு, மக்கள் தொகை மற்றும் பெண்களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளேன். குறிப்பாக உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு வழங்கும்போதும் மாநில அரசுகளின் கருத்துகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியத்தின் பரிந்துரைகளை ஏற்று உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க மத்திய அரசுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவையும் நியமிக்க வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், நிர்வாக ரீதியாக உருவாக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் செல்லும் தன்மையை நீதிபதிகள் திறம்பட தீர்மானம் செய்வதால் மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத் தன்மையை நீதிபதிகள் பிரதிபலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஒரே மாதிரியான சமூக வர்க்கத்தினருக்கு பாதுகாப்பு வளையமாக இருக்கக்கூடாது.
அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த 75 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் மக்கள் தொகை விகிதத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு மறுக்கப்படுவது வேதனைக்கு உரியது. எனவே உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் பதவியில் உள்ள நீதிபதிகள் நிச்சயமாக சமூக பன்முகத்தன்மையையும், இடஒதுக்கீட்டையும் பிரதிபலிக்கும் வகையில் உரிய சட்டதிருத்தம் மேற்கொள்வது அவசியம்” இவ்வாறு அந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.